சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் வீடு, வணிகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மட்டுமில்லாமல் அரசு துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், நீதிபதி குடியிருப்புகளுக்கும் மின் விநியோகம் செய்கிறது. இதற்கான கட்டணத்தை அந்தந்த துறைகள் அவர்களுக்கான வழிமுறைகளின்படி செலுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் வணிக பிரிவில் இடம்பெறுகிறது. அதேபோல நீதிபதி குடியிருப்புகள் வீட்டு இணைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றங்களின் மின் கட்டணம் நீதிமன்ற பதிவாளரின் மூலமாக மின்வாரியத்தில் மின் உபயோகத்தொகை கட்டப்பட்டுவது வழக்கம். இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகளின் குடியிருப்புகளில் 130 மின் இணைப்புகள் உள்ளன. அந்த மின் இணைப்புகள் முறையாக மின் கணக்கீடு செய்யப்பட்டு மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன் மின்பணியாளர் இடமாற்றம் காரணமாக மின் கணக்கீடு செய்து கட்டணத்தொகை தெரிவிப்பதில் தொய்வு ஏற்றப்பட்டிருந்தது. இதனால், மின் கட்டணம் செலுத்த உயர் நீதிமன்றம் முற்பட்டாலும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பணியாளர் இடமாற்றம் முடிவுக்கு வந்தநிலையில் மின்வாரியம் மின் கணக்கீடு செய்து நீதிபதி குடியிருப்புகளின் மின் கட்டண பாக்கியை தெரிவித்தவுடன் அதற்கான முழு தொகையும் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், இனி நிலுவை தொகை ஏதுமில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண பாக்கி முழுமையாக செலுத்தப்பட்டது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.