மதுரை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி மனு செய்துள்ளார். இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் கடந்த 4ம் தேதி பிராமண சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நடிகை கஸ்தூரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தெலுங்கு அமைப்பினர் புகார் கொடுத்து வருகின்றனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார். மேலும், கோயம்பேடு காவல் நிலையத்திலும் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கஸ்தூரிக்கு சம்மன் வழங்க எழும்பூர் போலீசார் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருந்தார். அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினரான சன்னாசி (71), மதுரை மாவட்டம் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், நடிகை கஸ்தூரி மீது ஆபாசமான வகையில் பேசி, சமயம், இனம், பிறந்த இடம், குடியிருப்பிடம், மொழி முதலியவற்றால் வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை வளர்த்தல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தவறான தகவலை தெரிவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில், மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். அதில், ‘‘தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன், என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றத் தயாராக உள்ளேன். எனவே, இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க, எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு: ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணை appeared first on Dinakaran.