×
Saravana Stores

‘தல’ பட்டத்தை அஜித் துறந்தது போல் ‘உலக நாயகன்’ பட்டம் வேண்டாம்: கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு

சென்னை: ‘உலக நாயகன் உள்பட எந்த பட்டமும் வேண்டாம்’ என்று கமல்ஹாசன் திடீரென்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
என்மீது கொண்ட அன்பினால், ‘உலக நாயகன்’ உள்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் அழைத்து வருகிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதுபோன்ற பாராட்டு சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்களின் அன்பால் நெகிழ்ந்திருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது மாறாத நன்றியுணர்வு உண்டு. சினிமா கலை என்பது எந்தவொரு தனி மனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும், மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது, அனைவராலும் ஆனது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக்குறைவும் வந்துவிடாத வண்ணம் அவற்றை துறப்பது என்பதே அது. எனவே, என்மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனிவரும் காலங்களில் எனது ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை ‘கமல்ஹாசன்’ என்றோ, ‘கமல்’ என்றோ, ‘கேஎச்’ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என்மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்ற ஸ்தானத்தில் இருந்தும், சினிமாவை நேசிக்கும் நம் அனைவரிலும் ஒருவனாகவே இருக்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வைக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு அஜித் குமார், இனிமேல் யாரும் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்றும், ‘ஏகே’ என்றோ அல்லது ‘அஜித்’ என்றோ, ‘அஜித் குமார்’ என்றோ அழைத்தால் போதும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். கமல்ஹாசனுக்கு ஆரம்பகாலத்தில் ‘காதல் இளவரசன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தது. பிறகு அவரது ரசிகர்கள், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று செல்லமாக அழைத்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ‘கலைஞானி’ என்ற பட்டத்தை கலைஞர் வழங்கினார். இன்றுவரை கமல்ஹாசனுக்கு அந்த பட்டமே நீடித்து வருகிறது.

The post ‘தல’ பட்டத்தை அஜித் துறந்தது போல் ‘உலக நாயகன்’ பட்டம் வேண்டாம்: கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ajith ,Kamal Haasan ,Chennai ,Ulaka Nayagan ,
× RELATED ஸ்ருதிஹாசன் கோபம்