சென்னை: மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24 ஆயிரத்து 986 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில் தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது.
ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இதுபோல தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனைகள் விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. எனவே, கடந்த அக்டோபர் 29ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மதுபானங்களை அதிக விலைக்கு விற்கும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யும் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு appeared first on Dinakaran.