தமிழகத்தில் சத்யபிரத சாகு, ஆர்த்தி உள்ளிட்ட 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமயமூர்த்தி, ஷில்பா பிரபாகர் சதீஷ், அதுல் ஆனந்த், சத்யபிரத சாகு, ஆர்த்தி மற்றும் அருண் தம்புராஜ் உள்ளிட்ட 6 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சுற்றுலாத்துறை ஆணையராகவும், மேலாண்மை இயக்குநருமான சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊரக திட்ட இயக்குநராக உள்ள ஷில்பா பிரபாகர் சுற்றுலாத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் ஆர்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலக துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகத்தில் சத்யபிரத சாகு, ஆர்த்தி உள்ளிட்ட 6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: