×

நோய் நாடி நோய் முதல் நாடி

நன்றி குங்குமம் டாக்டர்

உடலை மீறுதல் மீதான காதல்?

மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதை செய்து பார்த்தவன் தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒரு போதும் மீறலைப் புரிந்து கொள்ள முடியாது – எழுத்தாளர். ஜெயகாந்தன்.
மனிதர்களுக்குப் மிகப்பிடித்த விளையாட்டு என்றால், அது உடலும், மனமும் சொல்வதை கேட்காமல், மீறி செயல்படுவதைத் தான் மனிதர்களுக்கு மிகப்பிடித்த விளையாட்டாக நான் பார்க்கிறேன். இன்றைக்கு பலரும் அவர்களுடைய உடலின் ஆரோக்கியத்தை பணயமாக வைத்து விளையாடுகிறார்கள்.

உதாரணத்துக்கு, நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். அதாவது, தாயின் கருவறைக்குள் இருக்கும் பிறக்காத குழந்தையிடம், உலகம் எப்படி இருக்கும் என்று கேட்டால், இருள் சூழ்ந்த திரவ வடிவில் இருக்கும் என்று குழந்தை அதன் பார்வையில் கூறும். அதே போல்தான், நாமும் உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உடலுக்கு வெளியே இருக்கும் நம் உருவ அமைப்பை வைத்து நன்றாக இருக்கின்றோம் என்று கூறுகிறோம். அதுவும் நாம் நன்றாக, ஆரோக்கியமான உணவைத் தான் சாப்பிடுகின்றோம் என்ற எண்ணமே உடலின் வெளிப்புற தோற்றத்தில் இருக்கும் பிம்பமே நமக்குள் அதீத நம்பிக்கையை, உறுதி செய்கிறது.

இன்றைய தலைமுறையில் அடிக்சன் என்று எவையெல்லாம் என்று கேட்டால் போதும், வரிசையாக போதைப்பழக்கம் மற்றும் மொபைல் அடிக்சன் என்றெல்லாம் கூறுவார்கள். அந்த அடிக்சனோடு உணவு சார்ந்த அடிக்சனையும் இனி இணைக்க வேண்டும் என்று கூறுவேன்.இன்றைக்கு பெரும்பாலானோர் உணவின் மீதான அதீத ஈடுபாட்டால், சமூக மக்கள் அனைவரும் நன்றாக சாப்பிடுகின்றோம் என்று நினைக்கிறோம். அதற்கேற்றவாறு ஒரு வகையினர், 699 ரூபாய் காம்போ உணவை பல மாடர்ன் உணவகங்களில் ஆஃபர் போட்டிருக்கிறார்கள் என்று சாப்பிடப் போகிறோம் என்பார்கள். அதில் நாம் சாப்பிடுவது ஒரு சில வகைகள் மட்டும் தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி காம்போ ஆஃபரில் இன்னும் விதம் விதமான உணவுகளை சாப்பிட முடியும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த மாடர்ன் உணவகங்களுக்கு செல்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது, மக்கள் நல்ல ஊட்டச்சத்துடன், ஆரோக்கியமாக சாப்பிடுகிறார்கள் என்றுதான் நம்பத் தோன்றும். ஆனால் இது மட்டுமே உண்மையல்ல.
எனக்குத் தெரிந்த ஒரு அம்மா அவரது வீட்டில், வகை வகையாக சமைத்துக் கொடுப்பார். ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அத்தனை உணவு வகைகளையும் அவர் சமைத்து பரிமாறியிருக்கிறார். ஒரு நாள் அவர், தனக்கு உடல் முடியவில்லை என்றும், தலை தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். அவரைப் பரிசோதித்ததில், அவரது ஹீமோகுளோபின் ஐந்து என்று காண்பித்தது. அவர் வீட்டிலுள்ள அனைவரையும் சாப்பிட வைத்திருக்கிறார். ஆனால், அவர் சரிவர சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அதனால் அவருக்கு, வைட்டமின் சார்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டோம்.

இம்மாதிரி சம்பவங்களை நாம் எதற்கு கூறுகிறோம் என்றால், முறையாக சாப்பிட்டு, உடலளவில் நன்றாக வேலை செய்து, சரியான அளவில் தூக்கமும் இருக்கும் போது, தேவையற்ற சிந்தனைகளால் பாதிக்கப்படாமல், ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதற்காக கூறுகிறோம். இந்த மாதிரி கூறும் தகவல்களை சிலர், வேறு விதமாக உபயோகிக்கிறார்கள். இன்றைக்கு நம் நாட்டில், மெடிக்கல் ஷாப் போய், உடல் சார்ந்து பாதிக்கப்பட்ட விஷயங்களைக் கூறினால் போதும், அனைவருக்கும் மருந்து எளிதாக கிடைத்து விடும். அதனால், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வேண்டுமென்று, வைட்டமின் மாத்திரைகளை அவர்களாகவே வாங்கி, மருத்துவரின் ஆலோசனை எதுவுமில்லாமல், வருடக் கணக்கில் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள்.

இதை ஏன் இப்படி சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் போதும், சிலர் சத்து மாத்திரை தானே என்பார்கள், சிலரோ அரசு செய்யும் சில திட்டங்களை, உடனே நமக்கு கூற ஆரம்பித்து விடுவார்கள். இதனால் உடலுக்கு என்ன கெடுதி வந்து விடப் போகிறது என்பார்கள். அதாவது பள்ளிகளில் அனீமியா முக்பாரத் என்ற திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில், 52 வாரங்கள் மற்றும் ஒவ்வொரு வியாழன் அன்று ரத்தசோகை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று, வைட்டமின் மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் கொடுக்கும் போது, குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் என்று வயது வித்தியாசம் பார்த்து, தெளிவாகக் கொடுக்கிறார்கள். ஆனால் நம் மக்களோ, அடுத்தவரைப் பார்த்து சூடு போடுவது போல், வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள்.

உதாரணத்துக்கு, காலையில் எழுந்து காபி குடிக்க தயாராகுறீங்க. காபி குடிக்கும்போதுதான் தெரிகிறது, ஒரு டீ ஸ்பூன் சர்க்கரைக்கு பதிலாக, 3 டீ ஸ்பூன் சர்க்கரை அதிகமாக போட்டு விட்டீங்க என்று தெரிகிறது. சரி, இன்று ஒரு நாள் என்று காபியை வீணடிக்காமல் குடித்தும் விடுகிறீர்கள். அதற்கு அடுத்த நாள், மறுபடியும், நேற்று போட்ட மாதிரி 3 டீ ஸ்பூன் சர்க்கரையை போடுறீங்க. இப்படி தொடர்ந்து அதீத சர்க்கரை கலந்த காபியை குடித்தால், உடல் என்னாகும். ஒரு நாளில், ஒரு காபி, குறைந்த சர்க்கரை உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்பது சரிதான். ஆனால், அதுவே 3 டீ ஸ்பூன் சர்க்கரை, 5 காபி என்று குடித்தால், உடலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதுபோல்தான், சத்து மாத்திரைதான் என்று தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தால், உடலின் நலனைக் கண்டிப்பாக பாதிக்கும்.

சத்து மாத்திரை எதற்கு சாப்பிட வேண்டுமென்று கூட தெரியாமல், சாப்பிடுபவர்களும் உண்டு. அதாவது தன்னுடையஉடலுக்கு என்ன மாதிரியான ஆரோக்கியம் தேவைப்படுகிறது என்பது புரியாமல் இருப்பதே இதன் காரணமாகும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒருவருக்கு மஞ்சள் காமாலை வருகிறது. மஞ்சள் காமாலையை சரிசெய்ய, அவருக்கு தெரிந்த விதத்தில் கீழா நெல்லி முதலில் சாப்பிடுகிறார், அதிலும் சரியாகவில்லை. அதன் பின், அவருக்கு அறிமுகமான வேறு துறை சார்ந்த மருத்துவரைச் சந்திக்கிறார். அவரிடம் எடுத்த சிகிச்சையும் மஞ்சள் காமாலையை குணமாக்கவில்லை. அடுத்தபடியாக, பொது மருத்துவரைச் சந்திக்கிறார்.

நோயாளியாக வந்த நபருக்கு, மஞ்சள் காமாலை வந்த சில காரணங்களில் மிகவும் முக்கியமானது ரத்தசோகையும், வைட்டமின் குறைபாடும் இருந்தது. வைட்டமின் குறைபாட்டிற்கான சிகிச்சையை கொடுக்க ஆரம்பித்ததும், மஞ்சள் காமாலை குணமடையத் தொடங்கியது. எப்பொழுதும், ஜெனரல் எக்ஸாமைன் செய்யக்கூடிய பொதுநல மருத்துவரைச் சந்தித்துவிட்டு, அதன் பிறகு, உடல் உறுப்பின் பாதிப்பிற்கு ஏற்றவாறு அந்தந்த துறை சார்ந்த மருத்துவரைச் சந்திப்பது சிகிச்சையின் கால தாமதத்தை குறைத்துக்கொள்ள முடியும்.

வைட்டமின் சத்து ஒரு நபருக்கு குறைவாக இருக்கிறது என்று தெரிந்தவுடன், ஜப்பானில் உள்ள உப்புதான் நல்லது என்றும், சிங்கப்பூரில் விளையும் கீரை தான் நல்லது என்றும் கூறும் மக்களை விட்டு ஒதுங்கி நில்லுங்கள். வர்க்கரீதியாக அவர்களின் செல்வாக்கை காட்ட ஆசைப்பட்டார்கள் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை நாம் குறை சொல்ல வேண்டாம். ஆனால், அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று நம்ப வேண்டாம். இந்த பூமி அனைவருக்கும் சொந்தமானது.

அனைத்து மக்களின், உடல்நல ஆரோக்கியத்திற்கும், அவர்கள் வாழும் இடத்திற்கும் ஏற்றவாறு உள்ள தட்பவெப்ப நிலைக்கும் தகுந்த உணவு வகைகளை இயற்கையாகவே அந்த மண்ணில் விளைவிக்க முடிகிறது. அதற்கேற்ற உணவு வகைகளைத் தான் நாமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். 1906 ம் ஆண்டில், ஆங்கில விஞ்ஞானி பிரடெரிக் கெளலன்ட் ஹாப்கின் ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றி ஆய்வு செய்தார். அதில் அவர் கூறியதாவது, மனித உடல் சில விஷயங்களை உற்பத்தி செய்வதில்லை. அதற்கு பதிலாக, மிகச்சிறிய உணவுகளில் அதிக சத்து பொருட்கள் இருப்பதாக கூறினார்.

மேலே சொன்ன மாதிரி மீறல் என்பது, மனிதனுக்குரிய ஒரு சுபாவம் தான். அந்த சுபாவம் ஒருசில நாட்கள் மட்டும் இருந்தால், அனைவருக்கும் நல்லது. சாப்பாட்டில் சத்து இருக்கிறது என்பது உண்மை தான். அதற்காக சாப்பாடு விதம் விதமாக சாப்பிட ஆசைப்பட்டு, ட்ரெக்கிங் மூலம் காட்டுக்குள் சென்று சாப்பிடுவது, கார் ரேஸிங் வைத்து, மாடர்ன் உணவகங்களில் டோக்கன் வாங்குவது எல்லாம் தினந்தோறும் பழக்கமாக மாறிவிடக் கூடாது என்பதே சவாலாக இருக்கிறது. உணவுகளில் மீதுள்ள அதீத ஈடுபாட்டால், நம் உடலின் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு மீற வைத்திருக்கிறோம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

என்றைக்குமே, நமக்கு அருகிலுள்ள விஷயங்களை அனுபவிக்கப் பழகுவோம். அதை தினந்தோறும் முறையாக செய்தால் போதும், ஆரோக்கியமான வாழ்க்கை,
நிம்மதியான சூழல் இயல்பாகவே அமைந்து விடும் என்பதே உண்மை.

பொது நல சிறப்பு மருத்துவர்: டி.எம். பிரபு

The post நோய் நாடி நோய் முதல் நாடி appeared first on Dinakaran.

Tags : Nadi Nadi Nadi ,Kumkum ,Dr. ,Love ,Jayakanthan ,
× RELATED மாரடைப்பு vs திடீர் இதயத் துடிப்பு முடக்கம்