×

பாலின பேதங்கள் ஒரு பார்வை

 

நன்றி குங்குமம் டாக்டர்

பாலின இலக்கணங்களின் விளைவுகள்

பறவைகளின் முட்டைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சியினால்தான் கோள வடிவத்திலிருந்து இன்றிருக்கும் ஓவல் வடிவத்திற்கு மாறினவாம். மரங்களில் கூடு கட்டி, முட்டைகள் இடும்போது உருண்டை வடிவ முட்டைகள் உருண்டு கீழே விழுந்து உடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததினால், அவை ஓவல் வடிவம் கொண்டிருக்கலாம் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அப்படித்தான் மனிதரின் உடலும் பரிணாம வளர்ச்சியில்தான் இன்று இரண்டு கால்களில் நடப்பதற்கு ஏதுவானதாக மாறியது என்றும் நம்பப்படுகிறது. பரிணாம வளர்ச்சியின் வாயிலாக பரிமாண வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. அவை நம் உடல் தோற்றம், உணவு முறைகள், வாழ்வு முறைகள், நம் சிந்திக்கும் தன்மை எல்லாவற்றிலும் மாற்றங்களை கொண்டு வருகின்றன.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல், மாற்றம் ஏற்படுவதில் தவறேதும் இல்லை.

ஆனால் நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்கள் நம் இனத்திற்கு முன்னேற்றம் கொண்டுவருவதற்காக இருக்கவேண்டுமேயல்லாது நம் இனத்தின் 50 சதவிகித மக்களை முடக்கிப்போடுவதாக அமையக்கூடாது. 50 சதவிகித மக்கள் முடக்கப்படும்போது மீதமுள்ள 50 சதவிகித மக்களின் ஆற்றல் சக்தியுடன் மட்டுமே நம் சமூகம் முன்னேற முயற்சி எடுக்க இயலும். சரிசமமான பாதி ஆற்றல் சக்தி முடங்கிப்போவதால் இங்கு 100 சதவிகித மக்களுக்கும் அது நட்டம் தானே?

இதைக்கூட சிந்திக்காமல், பெண்களை கற்பு என்னும் இலக்கணத்தில் புகுத்தி, அவர்களை வீட்டிற்குள் முடக்கிவிட்டனர் நம் முன்னோர்கள். அறிவும் ஆற்றலும் எல்லா மனிதர்களுக்கும் இருப்பதுதானே? அப்படியிருக்க, பெண்களை சமையலறையிலும், கணவர், பிள்ளைகள் பார்ப்பது, வீட்டை பராமரிப்பது என முடக்கிப்போட்டதில், இங்கு யாருக்கு என்ன லாபம் என்றால், முடக்கிப்போட்ட ஒவ்வொரு ஆணுக்கும் என்று நினைத்தால் அப்படி நினைத்த நினைக்கும் ஆண்கள் தன் அறிவையும் சரியாக உபயோகிக்கவில்லை என்பதே உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால், ஆம்.

ஆண்களுக்கு சேவை செய்ய, வேண்டுவது வேண்டிய நேரத்தில் கிடைக்க, ஆதிக்கம் செலுத்தி தன் இஷ்டம் போல் வாழ வழி வகுத்திருக்கிறது என்பதே உண்மை. ஆனால்,
இப்படிப்பட்ட ஏற்பாடுகளால் அவனின் சுமையும் அதிகமானது என்பதே உண்மை. தனி மனிதனாக, ஒரு குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டுவதும், குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான பணத்தேவைகளை பூர்த்தி செய்வதும் அத்தனை சுலபமா என்ன? இதே பெண்களையும் படிக்க வைத்து, அவர்களையும் வருமானம் ஈட்ட வைத்து, வீட்டிற்கான வேலைகளையும் பகிர்ந்து செய்தால் வாழ்வு எத்தனை சுலபமாக இருக்கும்? வருமானம் ஈட்டும் சுமை அந்தப் பெண்ணிற்கும் புரியும், வீட்டை நிர்வகிக்கும் திறன் அவனுக்கும் வரும்.

இன்று சில குடும்பங்களில் இப்படி இருவரும் வேலைக்கு வெளியில் சென்று, வீட்டு வேலைகளையும் பகிர்ந்து செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். இரண்டையும் மனமுவந்து செய்யும் குடும்பங்களை பார்த்தால், அதுவே அவர்களுக்குள் ஒரு புரிதலையும், நட்புணர்வையும் கொண்டுவந்திருக்கும்.

எல்லாவற்றிலும் சம உரிமை யுடன் வாழும் வாழ்விற்கும், ஒருவர் ஆதிக்கம் செலுத்தி இன்னொருவர் அடிமைப்பட்டு வாழ்வதற்கும் கண்டிப்பாக மலையளவு வித்தியாசங்கள் இருக்கும். வாழும் தரத்திலும் சரி, மன உணர்வுகளிலும் சரி. அழகாக, அருமையாக வாழ ஒரு வழி இருக்க, ஏன் மக்கள் இப்படிப்பட்ட ஆதிக்க/அடிமை வாழ்வை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ஆண்டாண்டு காலமாக?

வேறொன்றும் இல்லை. மனிதர்கள் எப்பொழுதுமே ஒரு பய உணர்விலேயே வாழ்கிறார்கள். பாதுகாப்பின்மை (insecurity) என்னும் நோய் காலாகாலமாக அவர்களை பீடித்திருக்கிறது. எப்பொழுது தனக்கென தானியங்களும், பொருளும் சேர்த்து வைக்க கற்றுக்கொண்டாரோ அன்றே இந்த பாதுகாப்பின்மை எனும் நோய் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு முன் எல்லா மிருகங்களும்போல தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே பாதுகாப்பு தேடிக்கொண்டிருந்தவர்கள், தன் உடைமைகளை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பு தேடத் தொடங்கிவிட்டதின் விளைவே இது.

நான் வெளியில் எவ்வளவு போராடினாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கென்று ஒரு பெண்ணும், எனக்கானதாக மட்டுமேயான பிள்ளைகளும் அவன் தேவையாகி விட்டன. பெண்ணிற்கான இலக்கணங்களும், ஆண்களுக்கான இலக்கணங்களும் இவற்றை காப்பாற்றிக்கொள்ள இயற்றப்பட்டன. பெண்களுக்கும் இது தொடக்கத்தில் ஒரு செளகரியத்தை அளித்திருக்க வேண்டும். இல்லையெனில், இப்படிப்பட்ட இலக்கணங்களை ஆரம்பத்திலேயே மறுத்திருப்பார்கள். ஆக என்றோ எந்தப் புள்ளியிலிருந்தோ, பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் ஆரம்பித்து, அதை பெண்களே மற்ற பெண்களுக்கு சுலபமாக கடத்தும் அளவிற்கு ஆக்கப்பட்டுவிட்டது.

இவையெல்லாம் இறந்த காலத்தின் தாக்கங்கள். பெண்கள் வீட்டை பராமரிப்பதும், ஆண்கள் வருமானம் ஈட்டி வருவதும் ஒரு குடும்பத்திற்கான வேலை பளுவை பகிர்ந்து செய்யும் ஒரு வழியாக மட்டும் பார்க்கப்பட்டிருந்தால் இங்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், இதையே அடிப்படையாக வைத்து, அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என கேள்விகள் கேட்டு, பெண்களுக்கு சமையலும், பிள்ளை பெறுதலும், குடும்பத்தை கவனிப்பதும் மட்டுமே வேலை என்று நிர்ணயித்து, அவளின் மற்ற ஆற்றல்கள், ஆசைகள், சுதந்திரம் எல்லாம் பறிக்கப்பட்டு, வருமானம் ஈட்டி வரும் ஆணே குடும்பத் தலைவன் என்றும், வீட்டில் இருக்கும் பெண்கள் அவனின் தேவைக்காக மட்டுமே இருப்பவள் என்று ஆனதினால், இங்கும் அங்குமாக பெண்கள் தங்கள் உரிமைகளுக்கு போராடவும், தாங்களும் ஆண்களைப் போல் ஒரு மனிதப் பிறவிதான் என்றும், ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரங்கள் தங்களுக்கும் வேண்டும் என்று சிறிதாக போராடத் தொடங்கியதும், சில புரிதல் உள்ள ஆண் உள்ளங்கள் அவர்களின் போராட்டத்திற்கு உடன் நின்றும் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கிறோம். அவர்களுக்கு நன்றிகள் பல. இன்று பெண்கள்

பள்ளிகள், கல்லூரிகள் என சென்று படிக்கிறார்கள், தங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்கிறார்கள், தன் திறமைகளை வெளிக்கொணருகிறார்கள், சிலர் பெரிய பெரிய சாதனைப் பெண்களாகவும் உருவெடுக்கிறார்கள். ஆனால் இன்னும் முற்றிலும் பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுவிட்டார்களா என்றால் இல்லை என்றே வருத்தம் கொண்டு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்னும் பல மூளைச் சலவைகளிலிருந்து நாம் (எந்தப் பாலாராக இருந்தாலும்) முழுமையாக வெளிவரவில்லை.

இன்னும் நிறைய சமூகங்களில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் படிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் கட்டாயத் திருமணங்கள் செய்துவைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற வாக்குக்கு ஒப்ப வாழ்ந்துதான் தீர்க்கிறார்கள். இன்றைய நிலையில், ஆண்டாண்டு மூளைச் சலவைகளால் அறிவு முடங்கிப்போன பெண்களே ஆணாதிக்கம் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சம உரிமை பெற்ற பெண்கள், தன்னை பெண்ணியவாதியாக, சுதந்திரப் பெண்ணாக உணரும் பெண்களும், பெண்ணை தங்களுக்கு சமமாக மதிக்கும், நடத்தும் ஆண்களும் உருவாகிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கூடிய விரைவில் சமதளத்தில் அனைவரும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இவை தருவதாக இருந்தாலும், இன்னொருபுறம், கூட்டம் கூட்டமாக, ஆண்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் என்று பெண்கள் கூட்டமும், பெண்கள் அனைவரும் ஆண்களை இப்பொழுதெல்லாம் மனிதர்களாகவே மதிப்பதில்லை எனவும், இந்தச் சுதந்திரம்தான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளும், புலம்பல்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள முயல வேண்டும். இங்கு ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு வாழ்வதில், நாம் விரும்பும் சமத்துவம் பெற வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு தனிமனிதரும், அவர் ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், இல்லை, திருநங்கை, திருநம்பி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவர்களுக்கான முடிவுகளை அவரவர் எடுக்கும் உரிமையுடன் வாழ்வது மட்டுமே, தனிமனித உரிமைகள் காக்கப்பட்டால் மட்டுமே சமத்துவம் என்பது சாத்தியப்படும். ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வது, பிளவுகளை அதிகரிக்குமே தவிர உண்மையான சமத்துவத்தை நோக்கி நகர வாய்ப்பே இல்லை.

நம் அனைவருக்கும் ஒரே உலகம்தான். இந்த பூமியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தினாலேயே இங்கு வாழும் தகுதியும் அனைவருக்கும் உண்டு. ஒவ்வொருவரையும் தனிமனிதராக மதித்து, அவருக்கான இடத்தை நாம் ஆக்கிரமிக்காமல், ஆதிக்கம் செலுத்தாமல், அது குடும்பத்திற்கு உள்ளான உறவுகளாக இருந்தாலும், நம் சமூகத்தில் வாழும் மற்ற மனிதர்களினுடனான உறவுகளாக இருப்பினும், வாழ நாம் ஒவ்வொருவரும் தொடங்கினாலே இங்கு சமத்துவம் சாத்தியமாகும்.

தொகுப்பு: லதா

(தொடர்ந்து சிந்திப்போம்…)

The post பாலின பேதங்கள் ஒரு பார்வை appeared first on Dinakaran.

Tags :
× RELATED இயற்கை 360°