நன்றி குங்குமம் டாக்டர்
தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய சவால் தொப்பையைக் குறைப்பதுதான். ஏனெனில் இன்றைய சூழலில் பல நோய்களுக்கு 90 சதவீதம் அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புகள்தான் காரணம். எனவே, தொப்பையைக் கரைக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடாமல் இருந்தால், நாளடைவில் இந்த தொப்பையால் உயிருக்கு ஆபத்தை விளைக்கும் பல நோய்களை பரிசாக பெற வேண்டிவரும். குறிப்பாக, ஆண்கள் 40 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும் கொண்டிருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சீராக மூச்சுவிட முடியாது. சுவாசிப்பதில் அவர்கள் சிரமத்தை உணர்வார்கள். புற்றுநோய் ஆய்வுகளில் 20 சதவீத புற்றுநோய்கள், அதிகப்படியான உடல் பருமனால் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தொப்பை அதிகரித்தால், வருங்காலத்தில் புற்றுநோயின் தாக்கம் ஏற்படும் அபாயம் உண்டு.
தூக்கத்தில் மூச்சுத்திணறல், நாள்பட்ட தூக்க குறைபாடு உள்ளவர்கள், இரவில் தூங்கும்போது பலத்த சப்தத்துடன் குறட்டைவிடுவதோடு, நிம்மதியான தூக்கத்தையும் பெற முடியாமல் தவிப்பார்கள். இதற்கும் முக்கிய காரணம் தொப்பைதான்.என்னதான் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்து வந்தாலும், ஒருவரின் இடுப்பளவு அதிகமாக இருந்தால், அதனால் பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் வயிற்றில் கொழுப்புகள் தேக்கம் அதிகரிப்பதால், பித்தநீர் சரியாக வெளியேற முடியாமல், பித்தப்பையில் கற்களாக உருவாக ஆரம்பிக்கும். எனவே தொப்பையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும்.வயதான காலத்தில் தொப்பையுடன், உயர்ரத்த அழுத்தம் இருந்தால், கண்புரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
அதிகப்படியாக அடிவயிற்றில் தேங்கும் கொழுப்பினால் கடுமையான கணைய அழற்சி ஏற்பட அதிக வாய்ப்புண்டு.இடுப்பைச் சுற்றி தேங்கும் கொழுப்புகள் பித்தப்பை, கணையம் மற்றும் கண்கள் போன்றவற்றை மட்டும் தாக்காமல், மூளையையும் பாதிக்கும். மேலும், பக்கவாதம் வரும் அபாயமும் அதிகம். அடிவயற்றில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்குவதால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 40 வயதை எட்டும் இந்தியர்களை அதிகம் தாக்கும் ஒரு பொதுவான பிரச்னை சர்க்கரை நோய். இதற்கு பல காரணங்களில் தொப்பையும் ஒன்று.அடிவயிற்று கொழுப்புக்களின் தேக்கத்தால், இதய நோய்கள் மிகவும் வேகமாக ஒருவரைத் தாக்கும். ஆகவே உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன், தொப்பையையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டால் பல நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
தொகுப்பு: ஸ்ரீ
The post பெரும் தொப்பை பேராபத்து! appeared first on Dinakaran.