×

மூளையின் முடிச்சுகள்

சுய நோயறிதல்

“என்ன மொபைலும் கையுமாகவே இருக்க? எதும் லவ் பண்ணிட்டு இருக்கியா?” என்று ஜாலியாகக் கேட்டால், ‘‘அட, நீ வேற, கொஞ்ச நாட்களாக தூக்கமே இல்லை, கொஞ்ச நாளாக பசிக்கவே இல்லை, அதான் கூகுள் பண்ணி, எனக்கு என்ன பிரச்னைன்னு தேடிப் பார்த்துட்டு இருந்தேன்” எனக் கூறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.இன்றைய வெகுஜன மக்களிடையே விதவிதமான அடிமைப் பழக்கவழக்கங்கள்(addiction) இருக்கிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

இதில் பெரும்பான்மை குறித்துச் சொல்வதென்றால், மொபைல் அடிக் ஷன் மற்றும் போதைப்பழக்கம் என்பதைத் தெளிவாகச் சொல்லலாம். இவை மட்டுமில்லாமல், மற்றொரு அடிக் ஷன் ஒன்று உருவாகி இருக்கிறது. அது என்னவென்றால், தனக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளைப் பற்றி, தானாகக் கண்டறிந்து, அது குறித்துப் பேசுவது. அதாவது சுய நோயறிதல் (Self Diagnosis) என்று இதைச் சொல்லலாம்.

தனக்கு நோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மனநலம் சார்ந்து ஏற்படும் விளைவுகளைஇணையத்தில் தேடி தனக்கு இந்தப் பிரச்னைதான் உள்ளது என்பதை சுய பரிசோதனை செய்து, என்ன நோய் என்பதையும் தானாகவே உறுதி செய்து கொள்வதே சுய நோயறிதல் (Self Diagnosis) என்பதாகும். பொதுவாக மனிதர்கள் கேட்கும் என்னவிதமான கேள்வியாக இருந்தாலும், கூகுள் விதவிதமான பதில்களை சுவாரஸ்யத் தன்மையோடு காண்பிக்கும். உதாரணமாக, ஒருவருக்கு தலைவலி தொடர்ந்து ஏற்படுகிறது என்று இணையத்தில் தேடினால், அது பெரும்பாலும் மூளையில் கட்டி உள்ளது என்பது போன்ற முடிவுகளைக் காண்பிக்கும்.

அதேபோல், உடலில் தேவையற்ற கட்டிகள் உள்ளது என்பதை இணையத்தில் தேடினால், அது புற்றுநோய் கட்டி என்பது போன்ற முடிவுகளை காண்பிக்கும். உடலில் கட்டிகள் மற்றும் தலைவலி ஏற்படுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை நாம் கூறும் போது, மூளையில் கட்டி அல்லது புற்று நோயை மட்டும் உண்டாக்கிவிடும் என்று எந்த மருத்துவர்களும் கூற மாட்டார்கள்நாம் உடலால் அனுபவிக்கும் வலியை உணர்ந்து, தெளிவான மனநிலையுடன் எடுத்துக் கூறும் உடல்நலப் பிரச்னையிலே இத்தனை குழப்பங்கள் ஏற்படும்போது, மனநல பாதிப்பைப் பற்றி இணையத்தில் தேடினால், அதன் விபரீதம் இன்னும் அதிகமாகிறது. மனிதர்கள் செய்யும் சில இயல்பான விஷயங்களை கூட மனநல நோய்களுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து, அதை மனநோய் என்று வெளிப்படையாகக் கூறுவது என்பது, ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமையை மிகவும் பாதிக்கும் தன்மையைக் கொண்டதாகும்.

மனநலப் பிரச்னைகளை பற்றி சுயமாகக் கண்டறியும்போது, இயல்பாகவே உடல்நல பிரச்னைகளை விட மனநல பிரச்சினைகளை புரிந்து கொள்வதும், அதை உணர்வதும் சற்று கடினமாக இருக்கும். மனநல பிரச்னை என்பது எதற்காக திடீரென்று அதிகமாக கோபப்படுகிறோம், ஏன் அனைவரையும் விட்டு விலகித் தனிமையைத் தேடுகிறோம், யார் என்ன சொன்னாலும் அதீதமாக அதைப் பற்றியே சிந்திக்கிறோம் என்ற காரணங்கள் அவர்களை அறியாமல் அல்லது அவர்களின் இயல்பை மீறி நடந்து கொண்டிருக்கும். சில வகையான மனநலப் பிரச்னைகளை பெரும்பாலும் நம்மைச் சுற்றி உள்ளவர்களால் மட்டுமே உணர முடியும்.

இந்த சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்படும் மனநல அறிகுறிகளை சுயபரிசோதனை செய்வதற்காக இணையத்தில் தேடினால், அது மேலும் உங்களுக்கு அதிக மன உளைச்சலையும், மனநல பிரச்னையை தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி விடும்.உதாரணத்திற்கு, ஒருவருக்கு (Mood Swings) உணர்வு நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது என்றால், அதற்கு அவர்கள் இருக்கும் சூழ்நிலை, வேலைப்பளு, மன அழுத்தம், உறவு சிக்கல் போன்ற நடைமுறை சிக்கல்கள் எனப் பல காரணங்கள் இருக்கலாம்.

அல்லது தொடர்ந்து உணர்வு நிலை மாற்றங்கள் பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக காணப்படுகின்றது என்றால், ஆளுமைக் கோளாறு அல்லது மனநலப் பிரச்னையின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் நாம் உணர்வு நிலை மாற்றங்கள்(Mood Swings) ஏற்படுகின்றது என்று இணையத்தில் தேடினால் அது பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) எனப்படும் இரு துருவ மனநோய் உங்களுக்கு உள்ளது எனக் காட்டி விடும்.

இணையத்தில் கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட, அறிவியல் பூர்வ தகவல் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறு சுய பரிசோதனை செய்வதினால் உங்களுக்கான பிரச்னையைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என நீங்கள் நினைத்துக் கொள்கின்றீர்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக, பெரும்பாலான நேரங்களில் கிடைக்கும் தரவுகள் மற்றும் தகவல்கள் நமக்கு விழிப்புணர்வுக்கு பதிலாக மனக்குழப்பங்களும், தேவையற்ற எதிர்மறை எண்ணங்களும்தான் உருவாகின்றது என்பதை நாம் மறந்து போய் விடுகின்றோம்.

சுய நோயறிதல் மூலம் ஏற்படும் குழப்பங்களுக்கான தீர்வு என்னவென்றால், உங்கள் வீட்டில் குழாய் உடைந்து விட்டது என்றால், பிளம்பரைக் (plumber) கூப்பிட்டு, அதை சரி செய்வது எதற்காக? அவர் அந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அதில் அவருக்கு அனுபவம் உள்ளது என்றும், எனவே அந்த வேலையை அவர் கனக்கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில்தான் நாம் அவரை அணுகுகின்றோம்.

அதேபோலத்தான் நமது உடல் நலத்திலும், மனநலத்திலும் ஏதேனும் பிரச்னைகள் அல்லது அறிகுறிகள் ஏற்படுகின்றது என்றால், அதைப்பற்றி முழுமையாக தெரிந்த மற்றும் படித்து புரிந்து வைத்துள்ள மருத்துவர்களை அணுகுவது மட்டுமே சரியான முறையாகும்.நாம் படித்தவர். நமக்கு அனைத்தும் தெரியும் என நினைத்து கூகுள் மூலமாக மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ தகவல்களில் நமது திறமையை காண்பிக்க வேண்டாம்.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Tags : Google ,
× RELATED நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியா?