* 95 சதவீத பணிகள் நிறைவு
* அமைச்சர் நேரில் ஆய்வு
தர்மபுரி : சுற்றுலா தலமான வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
தர்மபுரியில் இருந்து சுமார் 25 கி.மீ., தொலைவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான வத்தல்மலை உள்ளது. ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் வத்தல்மலை, சுமார் 225 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். இந்த மலைக்காடுகளில் உள்ளூர் தாவரங்கள் நிறைந்துள்ளன.
மேலும், காட்டெருதுகள் மற்றும் காட்டுப்பன்றிகள், நீலகிரி லங்கூர், சாம்பார் இன ஆடுகள் காணப்படுகின்றன. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர் உள்பட எண்ணற்ற மூலிகை தாவரங்களும் இந்த மலைப்பகுதிகளில் இருக்கின்றன.
வத்தல்மலைக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு மலைவாழ் மக்கள் ஒன்று சேர்ந்து மண் சாலை அமைத்தனர். இதையடுத்து, கடந்த 2011-2012ம் ஆண்டு, அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன் வைத்தனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வத்தல்மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, வத்தல்மலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து ஓராண்டுக்கு முன்பு வத்தல்மலைக்கு பஸ் விடப்பட்டது. மேலும், வத்தல்மலையை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்தது.
தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தலமாக வத்தல்மலையை மாற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் 95 சதவீத அளவிற்கு முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடிந்ததும் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று வத்தல்மலையில் ஆய்வு செய்தார். வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், மரக்கன்று நட்டார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமென ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, தர்மபுரி கலெக்டர் சாந்தி, திமுக எம்பி ஆ.மணி, சுற்றுலாத்துறை இணை இயக்குனர் புஷ்பராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், திமுக மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்ரமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், உதவி சுற்றுலா அலுவலர் கதிரேசன், மாநில நிர்வாகி தர்மச்செல்வன், சத்தியமூர்த்தி, செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி பொன்.மகேஸ்வரன், தொண்டரணி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ₹2.23 கோடியில் சாகச சுற்றுலா தலமாக மாறும் வத்தல்மலை appeared first on Dinakaran.