×

அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.92 லட்சம் இணையவழி பணமோசடி செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது

சென்னை : இணையவழி வர்த்தக மோசடி என்பது வளர்ந்து வரும் இணைய மோசடிகளில் ஒன்றாகும் இதன் மூலம் மோசடி செய்பவர்கள் புகழ் பெற்ற வர்த்தகத் தலங்கள் போல் தங்களை வெளிக்காட்டி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் எந்த வர்த்தகங்களில் முதலீடு செய்வதால் அதிக லாபம் ஈட்டலாம் என்பதை தாங்கள் தேர்ந்தெடுத்து தருவதாக ஆசையைத் தூண்டுகின்றனர். இவ்வாறு முதலீடு செய்ய விரும்புவோரை சமூக வலைத்தளங்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களை முதலில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைக்கின்றனர். பிறகு அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் இந்த தளத்தை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டியதாக புனையப்பட்ட சாட்சிகளை அளிக்கின்றனர் இதன் மூலம் அவர்கள் மீதான நம்பகத்தன்மை வளர்ந்து பின்னர் முதலீட்டாளர்களை குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு நிதியை மாற்றுமாறு கோருகின்றனர். ஒரு இணையதளத்தில் லிங்க் அனுப்பி இதன் மூலம் பணம் செலுத்தவும் எடுக்கவும் முடியும் எனக்கூறி இந்த இணையதளத்திலேயே அவர்கள் அதிக லாபம் ஈட்டியதாகவும் அவர்கள் கணக்கில் அதிக பணம் இருப்பதாகவும் காண்பிக்கின்றனர். அந்த பணத்தை தாங்கள் வங்கி கணக்குக்கு மாற்ற மேலும் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி கடைசி வரை அந்த பணத்தை எடுக்க விடாமல் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் வாட்ஸ் அப் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்கிறார்களே தவிர தொலைபேசி அழைப்பின் மூலம் எப்போதும் தொடர்பு கொள்வதில்லை.

கடந்த 19.07.2024ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை இணையவழி வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் ரூ. 92,16,710/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உயர்திரு.சந்தீப்மிட்டல், இ.கா.ப. கூடுதல் காவல் இயக்குநர், இணையதள குற்றப்பிரிவுதலைமையகம், சென்னை அவர்கள் உத்தரவின் பேரிலும், மதுரை மாவட்ட சைபர் கிரைம்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா அவர்களின் மேற்பார்வையில் மதுரை மாவட்டசைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி எதிரிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.21,08,703/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி எதிரிகளுக்கு இணையவழி வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, Bandhan வங்கி கணக்கை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் நித்தீஷ்குமார், லெட்சுமணன் மகன் சந்திரசேகரன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் சவுரியார்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மேற்படி எதிரிகள் Bandhan வங்கியில் நடப்பு வங்கி கணக்கு ஒன்றினை நித்தீஷ்குமார் மூலமாக தொடங்கி, சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைக்கு லட்சக்கணக்கில் பணம் கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது. மேற்படி எதிரிகளை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் சென்று கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குற்றவாளிகள் ஆந்திரா, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம். பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்திரபிரதேசம், மேற்குவங்காளம், நாகலாந்து, ஓடிசா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி சைபர் குற்றவாளிகளின் மூலம் மேற்கண்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி இணையவழி பணமோசடி செய்து ரூ.3 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒருஇந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை கூடுதல் காவல் இயக்குநர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள்.

பொதுமக்களுக்கான அறிவுரைகள்:

1) பிரபல வர்த்தக தளங்களில் இருந்து தொடர்பு கொள்வதாகக் கூறிக்கொள்ளும் முறைகேடான வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் அத்தகைய குழுக்களில் போடப்படும் சான்றுகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களை யாரேனும் அவ்வாறு குழுக்களில் சேர்த்திருந்தால், உடனடியாக அந்த சேர்த்திருந்தால் உடனடியாக அந்த குழுவில்இருந்து வெளியேறவும்.
2) மோசடி செய்பவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கிகளில் நடப்பு கணக்குகளை உருவாக்குவதால் தனிப்பட்ட தகவல்களை பகிரவும் அல்லது எந்த ஊர் வங்கி கணக்குகளில் சட்டபூர்வ தன்மையை சரிபார்க்காமலோ, பணம் அனுப்பவோ வேண்டாம்.
3) உங்கள் வங்கி கணக்குகளை மற்றவர்களை பயன்படுத்த அனுமதிப்பதை தவிர்க்கவும், ஏனெனில் அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உங்கள் வங்கி கணக்குகளை உங்களுக்கு தெரியாமலே பயன்படுத்தபடலாம்.
4) தேரியாத ஆப்ஸ் பதிவிறக்காதீர்கள் அல்லது அந்நியர்கள் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள், ஏனெனில் அவை உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித்தரவை திருடும் வகையில் இருக்கலாம்.
5) உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்திருங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களை (கூகுள் பிளே ஸ்டோர்/ஆப்பில் ஆப் ஸ்டோர்) தவிர வேறு எங்கிருந்தும் தவிர்க்கவும். ஆப்-கள் அல்லது பிற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும்.

புகார் அளிக்க

நீங்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்து இருந்தால் சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து சம்பவத்தை புகார் அளிக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்

The post அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.92 லட்சம் இணையவழி பணமோசடி செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்