×
Saravana Stores

வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

திருவொற்றியூர், நவ.6: திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதைதொடர்ந்து, மாசுகட்டுப்பாடு வாரியம், சுகாதாரம், வருவாய், காவல், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு நடத்தினர். இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. மாணவிகள் தங்களது வகுப்பறையில் பீதியுடன் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மீண்டும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் பல மாணவிகளுக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிலர் வாந்தி எடுத்தனர்.

தகவலறிந்த பெற்றோர்பள்ளி வாயில் முன்பு முற்றுகையிட்டனர். பாதுகாப்பு இல்லாமல் மீண்டும் ஏன் பள்ளியை திறந்தீர்கள் என கேள்விகள் எழுப்பி வாக்குவாதம் செய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவிகளை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சி வட்டார துணை ஆணையர் கட்டா ரவிதேஜா, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சக்திவேல், தாசில்தார் சகாயராணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், காற்றில் நச்சுத்தன்மை உள்ளதா என்பதை அறிய, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பெரிய அளவிலான நவீன இந்திரங்களை நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். 2வது நாளாக நேற்றும் மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்து, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘ மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் அனைத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பள்ளியில் எந்த பிரச்னையும் இல்லை என்றனர். காற்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை மாசுகட்டுப்பாடு வாரியம் நவீன இந்திரங்களை கொண்டு பரிசோதனை செய்து வருகிறது. மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது,’’ என்றனர்.

மாசுகட்டுப்பாடு வாரியம் ஆய்வு அறிக்கை
பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு நடத்தி, சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், பள்ளியில் வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 35 மாணவர்களில் ஒருவருக்கு கூட உடல் நலப் பிரச்னை இல்லை. குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்களை தவிர, அதே பள்ளியில் படிக்கும் வேறு எந்த மாணவரும் எந்த பிரச்னையும் இல்லை. அருகில் வசிக்கும் பொதுமக்கள் கூட வாயுக் கசிவை உணரவில்லை என கண்டறியப்பட்டது. தேசிய பேரிடர் முகமை அதிகாரிகளும் இதுகுறித்து சோதனை நடத்தினர். ஆனால், வாயுக்கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், துணை முதன்மை அறிவியல் அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில், பள்ளி அருகில் தொழிற்சாலை எதுவும் இல்லை.

பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் கடைசியாக ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கான வேதியியல் செயல்முறை வகுப்புகள் நடந்துள்ளது. அப்போது, பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. மணலியில் உள்ள காற்று தர கண்காணிப்பகத்தில் இருந்து பெறப்பட்ட காற்றின் தரம் குறித்த தரவுகளில், கடந்த மாதம் 24ம் தேதி மதியம் 12 மணி முதல் 25ம் தேதி மதியம் 12 மணி வரை அமோனியா வாயுக்கசிவு ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து 3 நாட்களுக்கு காற்றின் தரத்தை கண்காணிக்க பள்ளியில் நவீன இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை: காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur Private School Test ,Tiruvotiyur ,private school ,Thiruvotiyur Private School ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் தனியார் பள்ளியில்...