×

மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே ஜெர்மானியர் இறந்து விட்டதாக அறிவிப்பு: 3 தூதரகங்கள் மூடப்பட்டதால் ஈரான் ‘பல்டி’

துபாய்: ஜெர்மன் அரசிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே ஜெர்மன் நாட்டை சேர்ந்த கைதி இறந்து விட்டதாக, ஈரான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர், ஜாம்ஷித் ஷர்மாத் (69). இவர், கடந்த 2020, ஜூலையில், துபாய் விமான நிலையத்தில் இருந்தபோது, ஈரான் அதிகாரிகளால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டார். ஜாம்ஷித், கடந்த 2014ல், ஈரானில் ஒரு மசூதியில் நடந்த, 14 பேர் இறப்புக்கு காரணமான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் என்றும், கிங்டம் அசெம்ப்ளி ஆப் ஈரான் என்ற தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து வேறு பல தாக்குதல்களை நடத்தியவர் என்றும் ஈரான் அரசு குற்றம் சாட்டியது. இதை, ஜாம்ஷித்தின் உறவினர்கள் மறுத்து வந்தனர். மேலும், ஜாம்ஷித்தை விடுவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஜாம்ஷித்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக, சமீபத்தில் ஈரான் அரசு அதிகாரிகள் அறிவித்தனர். இது, ஜெர்மனியில் பலத்த அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜெர்மனியில் உள்ள மூன்று ஈரான் தூதரகங்களை, ஜெர்மன் அரசு அதிரடியாக மூடியது. இதைத் தொடர்ந்து, ஈரான் அரசு உயரதிகாரி அஸ்கர் ஜகாங்கீர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஜாம்ஷித்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே அவர் இறந்து விட்டார்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரிவான தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

 

The post மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே ஜெர்மானியர் இறந்து விட்டதாக அறிவிப்பு: 3 தூதரகங்கள் மூடப்பட்டதால் ஈரான் ‘பல்டி’ appeared first on Dinakaran.

Tags : Iran ,Dubai ,German government ,Iranian government ,Jamshit Sharmat ,Dinakaran ,
× RELATED விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல்..!!