×

விறுவிறுப்பான வாக்குப்பதிவு; அமெரிக்காவின் புதிய அதிபர் யார்?.. கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் இழுபறி


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025 ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருப்பதால், நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், பைடன் போட்டியிலிருந்து விலகியதால் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கினர். கமலா ஹாரிஸ் களமிறங்கிய பிறகு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியது.

பல ஹாலிவுட் பிரபலங்கள், இந்திய வம்சாவளிகள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிக்க, எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள் டிரம்புக்காக குரல் கொடுத்தனர். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் களை கட்டியது. பொருளாதாரம், பிரிவினைவாதம், வெளிநாட்டவர்கள் குடியேற்றம் ஆகியவை தேர்தல் களத்தில் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டன. பென்சில்வேனியாவில் நேற்று முன்தினம் நடந்த தனது இறுதி பேரணியில் பேசிய கமலா ஹாரிஸ், ‘‘ஜனநாயக ஆட்சியின் கீழ் வெறுப்பு, பிரிவினையை கடந்து புதிய தொடக்கத்தை உருவாக்க வாருங்கள்’’ என அழைப்பு விடுத்ததோடு, ‘‘டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் எதிர்காலம் இருண்ட காலமாகிவிடும்’’ என்ற எச்சரிக்கையுடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். ‘‘இன்றிரவு அனைத்து அமெரிக்கர்களுக்கும் எனது செய்தி மிகவும் எளிமையானது.

நாம் இன்று இருப்பது போல் வாழ வேண்டியதில்லை’’ என டிரம்ப் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விறுவிறுப்பான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. தேர்தல் நாளில் கூட்டத்தை தவிர்க்க, முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி அமெரிக்காவில் உள்ளது. அதன்படி கடந்த ஒருமாதத்தில் 8.2 கோடி மக்கள் தபால் மூலமாகவும், நேரிலும் முன்கூட்டியே வாக்களித்து முடித்தனர். ஆனாலும், வடகரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் மக்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமில்லை என்பதால் பலரும் டிரைவிங் லைசன்சை அடையாளமாக காட்டி வாக்களித்தனர். இரவு 7 மணியுடன், இந்திய நேரப்படி இன்று காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடும் போட்டி நிலவும், பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் மட்டும் கூடுதல் நேர வாக்குப்பதிவுகள் நடந்தன. வாக்குப்பதிவு முடிந்த மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இத்தேர்தலில் மக்கள் தங்கள் மாகாண பிரதிநிதிகளான எம்பிக்களுக்கு வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 எம்பிக்களில் 270க்கும் மேற்பட்ட வாக்குகள் பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெறும் எம்பிக்கள் மூலம் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

சமபலம் கொண்ட வேட்பாளர்கள் என்பதால் கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் இழுபறி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இன்று மாலைக்குள் புதிய அதிபர் யார் என்பது முடிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முடிவில் டிரா
நியூஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள சிறிய கடற்கரையோர நகரமான டிக்ஸ்வில் நாட்சில் தேர்தல் நாளன்று நள்ளிரவிலேயே வாக்குப்பதிவு தொடங்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நகரில் மொத்தம் 6 பேர் மட்டுமே வாக்காளர்கள். அதில் 4 பேர் குடியரசு கட்சி ஆதரவாளர்கள். 2 பேர் எந்த கட்சியையும் சேராதவர்கள். வழக்கப்படி நேற்று நள்ளிரவு இங்கு தேர்தல் தொடங்கியது. வெறும் 15 நிமிடத்தில் 6 வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையாற்றி, வாக்கு எண்ணிக்கையும் முடித்து முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் கமலா, டிரம்புக்கு தலா 3 வாக்குகள் கிடைத்தன.

* கமலா ஹாரிஸ் (60) வெல்லும் பட்சத்தில், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை படைப்பார். மேலும், முதல் இந்திய வம்சாவளி அதிபர், முதல் கருப்பின பெண் அதிபர் என்ற பெருமையும் கிடைக்கும்.
* டிரம்ப் (78) அதிபராகும் பட்சத்தில் 132 ஆண்டுக்குப் பிறகு, அதிபராக தோற்ற பின் மீண்டும் வெற்றியை எட்டும் முதல் அதிபர் என்ற சாதனையை படைப்பார்.
* மொத்தம் 26 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

The post விறுவிறுப்பான வாக்குப்பதிவு; அமெரிக்காவின் புதிய அதிபர் யார்?.. கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் இழுபறி appeared first on Dinakaran.

Tags : United States ,Kamala Harris ,Trump ,Washington ,US presidential election ,America ,
× RELATED அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி...