ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு – சத்தீஸ்கர் டிரா


கோவை: தமிழ்நாடு – சத்தீஸ்கர் அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 259 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, 241 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற தமிழ்நாடு, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் நாராயண் ஜெகதீசன் 28 ரன், ஆந்த்ரே சித்தார்த் 36 ரன்னுடன் நேற்று கடைசி நாள் சவாலை எதிர்கொண்டது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தனர். ஆந்த்ரே சித்தார்த் 41 ரன் (66 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷுபம் அகர்வால் பந்துவீச்சில் திவாரி வசம் பிடிபட்டார். அடுத்து ஜெகதீசன் – விஜய் ஷங்கர் இணைந்து 67 ரன் சேர்த்தனர்.ஜெகதீசன் 60 ரன் எடுத்து (122 பந்து) அஜய் மண்டல் பந்துவீச்சில் ஜிவேஷ் பட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பூபதி குமார் 9 ரன்னில் வெளியேற, விஜய் ஷங்கர் – பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய விஜய் ஷங்கர் சதம் விளாசி அசத்தினார். தமிழ்நாடு அணி 76 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்திருந்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது.விஜய் ஷங்கர் 106 ரன் (165 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), பிரதோஷ் ரஞ்சன் 39 ரன்னுடன் (73 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2வது இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்திய சுபம் அகர்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சத்தீஸ்கர் அணி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. டி பிரிவில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில்… சண்டிகர் (13), ரயில்வேஸ் (13), டெல்லி (11) அணிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாடு (10 புள்ளி) 4வது இடத்தில் உள்ளது.

 

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு – சத்தீஸ்கர் டிரா appeared first on Dinakaran.

Related Stories: