* பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் (56 வயது, தென் ஆப்ரிக்கா) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், தற்போது டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேசன் கில்லஸ்பி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள், டி20 தொடர்களிலும் பயிற்சியாளராக செயல்படுவார் என்று பாக். கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தென் ஆப்ரிக்கா செல்கிறது. அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நவ.8 -15 வரை விளையாட உள்ளது. அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் அணி நவ.15ம்தேதி முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால், தென் ஆப்ரிக்கா செல்லும் டி20 அணிக்கு யார் பயிற்சியாளர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்கா செல்லும் டி20 அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் (49 வயது) நேற்று நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.
* வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பைனலில் முன்னாள் சாம்பியன் இலங்கை ஏ – வங்கதேசம் ஏ அணிகள் மோதின. இலங்கை ஏ 3வது முறையாகவும், வங்கதேசம் ஏ முதல் முறையாகவும் இறுதிப் போட்டியில் களம் கண்டன. முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சாஹன் அரச்சிகே ஆட்டமிழக்காமல் 64 ரன் எடுத்தார். வங்கதேச வீரர்கள் பிலால் சமி 3, கசன்ஃபர் 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 18.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் என்ற இலக்கை எட்டி முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் செதிவுல்லாஹ் 55, கரிம் ஜனத் 33 ரன் விளாசினர். ஆட்ட நாயகன் செதிவுல்லாஹ், தொடர் நாயகன்: கசன்ஃபர் (வங்கதேசம்)
* லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக வெளிநாட்டு வீரரான நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), இந்திய வீரர்கள் மயாங்க் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத ஆயுஷ் பதோனி, மோசின் கான் ஆகியோரும் தக்கவைக்கப்படும் 5 வீரர்கள் பட்டியலில் உள்ளனர். அணி தொடங்கப்பட்ட 2022ம் ஆண்டு முதல் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தக்கவைக்கப்படும் வாய்ப்பு இல்லை. அதனை அணி நிர்வாகம் மட்டுமல்ல, ராகுலும் விரும்பவில்லையாம்.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.