தீபாவளிக்குள் செயல்பாட்டுக்கு வருமா ராஜாஜி மார்க்கெட்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பழமைவாய்ந்த ராஜாஜி மார்க்கெட் புதிய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், தீபாவளிக்குள் செயல்பாட்டுக்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் ராஜாஜி மார்க்கெட்டும், பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் ஜவகர்லால் நேரு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்த, இரு மார்க்கெட்டுகளும் நகரில் துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்நிலையில் மாநகர விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியாக 2 மார்க்கெட்டுகளும் செயல்பட்டு வந்தது.

எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ராஜாஜி மார்க்கெட் ரூ.7 கோடி மதிப்பீட்டிலும், ஜவகர்லால் நேரு மார்க்கெட் ரூ.4 கோடி மதிப்பீட்டிலும் புதிதாக கட்ட முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால், ராஜாஜி மார்க்கெட் புறநகர் பகுதியான ஓரிக்கை மிலிட்டரி சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள திடலில் மாற்றப்பட்டது. இங்கு, கடந்த 2 ஆண்டுகளாக ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புறநகர் பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் வராமல் வியாபாரம் பாதிப்பதாக வியாபாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக ராஜாஜி மார்க்கெட்டை திறந்து வைத்தார். உடனடியாக மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சுமார் 2 மாதங்களுக்கு மேலாகியும் மொத்தம் உள்ள 258 கடைகளை டெண்டர் விடும் பணிகளே இன்னும் முடியாததால், வரக்கூடிய தீபாவளி பண்டிகைக்கு கூட செயல்பாட்டுக்கு வராத நிலையில், புதிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் தற்காலிக ராஜாஜி மார்க்கெட் உள்ளதால் போக்குவரத்து செலவு, நேர விரயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அருகிலுள்ள கடைகளிலேயே அதிக விலை கொடுத்து காய்கறிகள் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

The post தீபாவளிக்குள் செயல்பாட்டுக்கு வருமா ராஜாஜி மார்க்கெட்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: