தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பு: ஆளுநர் பட்டங்களை வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணித்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. ஆண்டு அறிக்கையை துணைவேந்தர் நாராயணசாமி வாசித்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் 5371 மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவத்தில் 1,485 மாணவர்கள், இந்திய மருத்துவத்தில் 2055 மாணவர்கள், மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளில் 26882 மாணவர்கள் என மொத்தம் 35793 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக பல்கலைக்கழக தேர்வுகளில் முதலிடம் பெற்று பதக்கம் பெற்றவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆளுநர் ஆர்என்ரவி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை நேரடியாக வழங்கினார். இதில், 25 மாணவர்களுக்கு பி.எச்.டி பட்டம், பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 96 மாணவர்கள் என 142 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் ராம் ஆனந்த் 9 பதக்கங்களும், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சுர்கித் நந்தா 7 விருதுகளும் பெற்றுள்ளனர். சிறப்பு விருந்தினராக சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விவேக் லால் கலந்துகொண்டார்.

முன்னதாக விவேக் லால் பேசுகையில், நமது நாட்டின் மருத்துவர்கள் தான் உலகிலேயே சிறந்த மருத்துவர்கள். ஒரு நோயாளியை குணப்படுத்தினால், அந்த மருத்துவர் அவர்களின் குடும்ப உறுப்பினராகி விடுகிறார். இந்தியாவில்தான் மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு கிடைக்கிறது. நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது கடமையாக நினைத்தால் அது மகிழ்ச்சியை தரும் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சைக்கு பிறகு ஆளுனர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பதில்லை. அந்த வகையில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவில்லை. பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் அமைச்சர் பெயர் இடம் பெற்றிருந்தது.

The post தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பு: ஆளுநர் பட்டங்களை வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: