மலை கிராமங்களை மேம்படுத்த திருச்சி அருகே சூப்பர் சுற்றுலா தலம்: விரைவில் பணிகள் தொடக்கம்

திருச்சி: திருச்சி அருகே பச்சைமலையில் ரூ.5 கோடியில் சூப்பர் சுற்றுலா தலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு போதிய வசதிகள் இல்லை.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடையாமல் உள்ளது. இப்பகுதியில் 3,700 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த பச்சை மலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு முதல்கட்டமாக, கோரையாறு அருவி சீரமைப்பு, ஜிப் லைனிங், புங்கே ஜம்பிங், வில்பயிற்சி தளம், பெயிண்ட்பால், பழங்குடி வாழ்வாதார பூங்கா, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் கோரையாற்றில் குளிப்பதற்கும், அங்கே தங்குவதற்கான விடுதிகள், வியூ பாயிண்ட், உடை மாற்றுவதற்கான அறைகள், உள்ளிட்ட வசதிகளை செய்ய தமிழக வனத்துறை மற்றும் தமிழக சுற்றுலாத்துறை ஆகியோருக்கு ரூ.2.3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பச்சைமலையில் செல்போன் சிக்னல் பிரச்னை இருந்தது. இந்த பகுதி சுற்றுலா தலமாக மாறும்பட்சத்தில் செல்போன் சேவைகள் முழுமையாக கிடைக்க 5 புதிய செல்போன் சிக்னல் கோபுரங்கள் அமைக்க பிஎஸ்என்எல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஓரிரு இடங்களில் சிக்னல் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பச்சைமலையை பொறுத்தவரை சாலை வசதிகள் முழுமையாக போடப்பட்டுள்ளது. பச்சைமலையை மேம்படுத்துவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஒரு முழுமையான ஆய்வு அறிக்கை தயார் செய்து அரசிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் பச்சைமலையில் உள்ள கோரையாறு அருவியை சீரமைத்து 2 அடுக்காக தண்ணீர் தேங்கி நின்று வழிந்தோடும்படி வடிவமைக்கவும், வழிந்து வரும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக 63 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மலையேறுவதற்கான வசதிகள் ஏற்படுத்துவதற்கு 2கிமீ, 5கிமீ, 7கிமீ என 3 தடங்களாக பிரிக்கப்பட்டு அந்த வழித்தடங்களில் 500மீட்டருக்கு ஒரு இடத்தில் இளைப்பாறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தவும், 2 ஏக்கரில் தண்ணீர் சாகச விளையாட்டு தளம் அமைக்கவும், 2.5கி.மீ அளவில் குளம் அமைத்து அதில் படகு சவாரி செய்வதற்கான வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டரின் ஆய்வறிக்கையின்படிதான் தமிழக அரசு பணிகளை செய்ய ஊரக வளர்ச்சி முகமைக்கு ரூ.2.7 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதரணி கூறுகையில், ‘‘பச்சைமலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை மற்றும் மாதிரி வரைபடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது’’என்றார்.

துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கூறுகையில், ‘‘இந்த மலைப்பாதை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் துறைக்கு எப்போது நிதி இருக்கிறதோ அப்போது தான் இந்த சாலையை சீரமைப்பார்கள். ஆனால் இதை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றியமைத்தால் கட்டாயம் 5 வருடங்களுக்கு ஒருமுறை புதிய சாலை போடுவார்கள். எனவே தமிழ்நாடு முதல்வர், இந்த மலைப்பாதையை வனத்துறையிடமிருந்து மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும். இரண்டு வழிசாலைகளாக விரிவுபடுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இந்த பகுதி சுற்றுலா தலமாக மாறும்பட்சத்தில் இங்குள்ள மக்கள் சிறிய கடைகள், உணவகங்கள் என்று தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள உதவியாக அமையும். திருச்சி மக்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் உள்ள இடமாகவும் மாறும்.

The post மலை கிராமங்களை மேம்படுத்த திருச்சி அருகே சூப்பர் சுற்றுலா தலம்: விரைவில் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: