அப்போது சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியில் 57.94 ஏக்கரில் 1,453 வீடுகள் கட்ட சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதும் அதற்காக ரூ.27.90 கோடி பணம் ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான ராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக தனது மகன் நடத்தும் முத்தாம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் பெறப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், வைத்திலிங்கம், அவரது மகன் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
இதையடுத்து வைத்திலிங்கம் தொடர்பான இடங்கள் மற்றும் ரூ.27.90 கோடி லஞ்சம் கொடுத்த ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் தொடர்பான இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாடு பகுதியில் உள்ள வீடு, தஞ்சை கணபதி நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் இளைய மகன் டாக்டர் சண்முக பிரபு வீடு, சென்னை அசோக் நகர் 10வது அவென்யூவில் உள்ள மகன்கள், மகள் நடத்தும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தி.நகரில் உள்ள மூத்த மகன் பிரபு வீடு, எழும்பூரில் உள்ள எம்எம்டிஏ தலைமை அலுவலகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் அறை என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதைதொடர்ந்து அசோக் நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் மகன், மகள் நடத்தும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் மட்டும் நேற்று 2வது நாளாக இரவு வரை சோதனை நடந்தது. குறிப்பாக அசோக் நகரில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வரும் வைத்திலிங்கத்தின் 6 நிறுவனங்களில் பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வாங்கி குவித்து வைத்துள்ள பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பங்கு முதலீட்டு ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பணம் அனுப்பிய ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவன அதிகாரிகளிடம் சிஎம்டிஏ தலைமை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ரூ.27.90 கோடி பணம் அரசு ஒப்பந்தங்களை பெற்று தந்ததற்காக வைத்திலிங்கத்திற்கு ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் லஞ்ச பணமாக வழங்கியதற்கான வங்கி பணப்பரிமாற்றத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
அதே நேரம் ரூ.27.90 கோடி பணம் வைத்திலிங்கத்தின் மகன் நடத்தும் நிறுவனத்திற்கு கொடுத்ததற்கான ஆவணங்கள் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் வைத்துள்ளனர். ஆனால் பணத்தை பெற்ற வைத்திலிங்கத்திடம் எதற்கான இந்த பணம் பெறப்பட்டது என்பதற்கான எந்த விதமான ஆவணங்களும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த சோதனைக்கு பிறகு சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது விரைவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்து விரைவில் சொத்துக்கள் முடக்க நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
The post அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான 6 நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை: பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்து ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.