காயம் காக்கும் கரிசலாங்கண்ணி

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை னைவர் ஆர். சர்மிளா

கரிசலாங்கண்ணி வயல்வரப்புகளிலும், நீர்பாங்கான இடங்களிலும் வளரக்கூடிய ஒரு சிறுசெடியாகும். முடி கருமையாக, நன்கு அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணியை அனைவரும் பயன்படுத்துவது இயல்பு. ஆனாலும், இதனை உணவில் சேர்க்கலாம் என்பது நாம் அனைவருக்கும் தெரியுமா என்பது கொஞ்சம் சந்தேகமே. நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கரிசலாங்கண்ணியை அன்றாட உணவில் துவையலாகவும், கடைசலாகவும் அல்லது பொரியலாகவும் பயன்படுத்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்றைய நடைமுறையில் இதனை நாம் ஒருசில மருத்துவப் பண்புகளுக்காகவே பயன்படுத்துகிறோம்.

கரிசலாங்கண்ணி அஸ்டரேசியே எனும் தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் எக்லிப்டா புரோஸ்ட்ரேடா என்பதாகும். இதில் வெள்ளை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிற கரிசலாங்கண்ணி வகைகள் உண்டு. குறிப்பாக நீலம் மற்றும் சிவப்பு கரிசலாங்கண்ணி அழிவுநிலைக்கு சென்றுவிட்ட தாவரமாக கூறப்படுகிறது. இன்று நமக்கு கிடைப்பது வெள்ளை மற்றும் மஞ்சள்நிற கரிசலாங்கண்ணி வகைகளே.

இரண்டு வகை கரிசலாங்கண்ணியுமே மருத்துவப் பண்புகளுக்காக பயன்பட்டு வருகிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணிக்கு கரிசாலை, பிருங்கராஜம், தேகராஜம் என்ற வேறுபெயர்களும் உண்டு. இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கிடைக்கப்பெறுகிறது. கரிசலாங்கண்ணியின் இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும்.

கரிசலாங்கண்ணியில் காணப்படும் சத்துக்கள்:

மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இதுமட்டுமில்லாமல் இதன் மருத்துவப் பண்புகளுக்காக இதில் விடிலோலேக்டோன், லூடியோலின், பீட்டா அமைரின், பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது.

கரிசலாங்கண்ணியின் மருத்துவப் பண்புகள்:

* பாஸ்பரஸ் சத்து கரிசலாங்கண்ணியில் உள்ளதால் உடலில் உள்ள அனைத்து திசுக்களும்யும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. இதனால் நரம்பு மண்டல செயல்பாட்டினை மேம்படுத்தமுடியும். உடல் சோர்வையும், மூளைச்சோர்வையும் தடுக்க முடியும்.

* உடல்பருமன், மாரடைப்பு மற்றும் இதயநோய் போன்றவற்றை தடுக்க உதவுகின்றன.

* கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ கரிசலாங்கண்ணியில் நன்கு காணப்படுவதினால் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த முடியும்.

* இதன் இலையை வேகவைத்து ஆவிபிடித்தால் மூலநோய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.

* கல்லீரல், மண்ணீரல் மற்றும் தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

* ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகமாக கரிசலாங்கண்ணியில் உள்ளதால் செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து இளமையுடன் இருக்க உதவுகிறது. உடல் பொலிவினை ஊக்குவிக்கிறது.

* கரிசலாங்கண்ணி இலைகளை நன்கு மென்று பற்களில் தேய்த்தால் பற்கள் ‘‘பளிச்” என்று வெண்மையாக மாறும். வாய்ப்புண் குணமாகும்.

* மஞ்சள் காமலை நோய்க்கு மருந்தாக கரிசலாங்கண்ணி பயன்படுகிறது.

* குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கினை குறைக்க பயன்படுகிறது.

* மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்லீரல் பிரச்சனைக்கு உள்ளானோர் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி கல்லீரலை பாதுகாக்கலாம்.

* கண் நோய் வராமல் பாதுகாக்க கரிசலாங்கண்ணி உதவுகிறது.

கரிசலாங்கண்ணியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இதன் இலைகளை மோருடன் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு பயன்பெறலாம். மேலும் துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுதல் பிரச்னை மற்றும் இளநரை பிரச்னை உள்ளிட்டவை கட்டுப்படும். இதன் இலை, பூ மற்றும் வேர் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பண்பு கொண்டது. இத்தகைய கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதியை மேம்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

‘‘கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு
கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி
சீலை வடிகட்டி தினம் பூசப்பா
கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்”.

The post காயம் காக்கும் கரிசலாங்கண்ணி appeared first on Dinakaran.

Related Stories: