முடி உதிர்தலுக்கு தீர்வு தரும் புதிய ஹோமியோபதி சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலச்சுழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் என பல காரணிகளால் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னை முடி உதிர்தல் ஆகும். அதிலும் இளம் வயதிலேயே பலரும் முடி உதிர்வை சந்திக்கின்றனர். பொதுவாக, ஒரு நாளைக்கு 50-100 முடி உதிர்வது பரவாயில்லை. அதுவே, கொத்து கொத்தாக அதிகப்படியான முடியை இழக்க ஆரம்பித்தால் கவலைக்குரிய விஷயமாகிவிடும். எனவே, முடி உதிர்தலை நிறுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டிவிடும் விதமாக எக்சோஜென் என்ற புதிய நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர் பத்ரா ஹோமியோபதி மருத்துவமனையினர். இது குறித்து அதன் மருத்துவர் அக்சய் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

எக்சோஜென் சிகிச்சை என்பது என்ன…

எக்சோஜென் சிகிச்சை என்பது முடி வளர்ச்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கான மிக நவீன ஹோமியோபதி சிகிச்சை முறையாகும். இந்தியாவில் தற்போது முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்காக கடந்த 6 மாதங்களாக பத்து பேரைக் கொண்ட ஒரு குழுவை தேர்வு செய்து அவர்களுக்கு சோதனை முயற்சிகள் செய்து சுமார் 95 சதவீதம் வெற்றி கிடைத்தப்பிறகே, பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.

யாரலெல்லாம் இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளலாம்.. பக்க விளைவுகள் உண்டா…

இந்த சிகிச்சை முறையை பொருத்தவரை, பயோ இன்ஜிம் என்னும் புதிய சீரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். இது டார்கெட்டட் தெரபி வகையை சார்ந்தது ஆகும். இந்த சீரம் வலுவிழந்த மயிர்கால்கள் வழியாக சென்று ஒவ்வொரு அணுவின் வளர்ச்சியையும் தூண்டிவிடுகிறது. இதன் மூலம் முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதற்குமுன்பு வரை பிஆர்பி என்ற ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை முறைதான் வழக்கத்திலிருந்து வருகிறது. அதைக்காட்டிலும் இது சற்று கூடுதல் நவீன சிகிச்சை முறையாகும்.

அறுவை சிகிச்சையோ அல்லது மருந்து மாத்திரைகளோ இல்லாமல், முடியின் வளர்ச்சியை தூண்டும் வகையிலான சீரம் கொண்டு செய்யப்படுவதால், இதில் 100 சதவீதம் பக்கவிளைவுகள் இல்லை. குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் மட்டுமே இந்த சிகிச்சைக்கு தேவைப்படும் நேரமாகும். அதேசமயம், சுமார் 20 சீட்டிங் வரை தேவைப்படும். அது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ எடுத்துக் கொள்ளலாம். நான்காவது வாரத்தில் இருந்தே சிகிச்சைக்கான பலன் தெரிய தொடங்கும். இந்த சிகிச்சையை 21 வயதிலிருந்து
65 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

அதுபோன்று ஹேர் கிரேட் என்ற ஒன்று இருக்கிறது. இது ஆண்களைப் பொருத்தவரை ஏழு வகையான ஹேர் கிரேட் இருக்கிறது. அதில் இரண்டாவது கிரேடிலிருந்து 5 ஆவது கிரேட் வரை இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது மயிர்கால்கள் வலுவிழந்ததனால் முடி உதிர்வு அதிகம் சந்திப்பவர்கள், வழுக்கை விழுந்தவர்களும் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மயிர்கால்கள் எவ்வளவு வலுவிழந்திருந்தாலும் இந்த சிகிச்சையின் மூலம் புத்துயிர் அளித்து முடி வளர்ச்சியை தூண்டிவிட முடியும்.

முடி உதிர்தலுக்கான காரணிகள்..

முடி உதிர்தல் ஒரு நாள்பட்ட நிலையில் இருந்தால், அது உணவுமுறைகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், முடி ஸ்டைலிங் போன்ற பல காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உதாரணமாக, சிலவற்றை பார்ப்போம்.

பரம்பரை காரணம்

ஒருவருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு ஏற்பட மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, மரபணு குறைபாடுகள், ஜெனடிக் பிரச்னைகள் போன்றவையும் ஒரு காரணமாகிறது.

ஹார்மோன் சமநிலையின்மை

தலைமுடி இளம் வயதிலேயே மெலிந்து போகத் தொடங்குவதற்கு ஹார்மோன் மாற்றங்களும் ஒரு முக்கிய காரணமாகும். முடி வளர்ச்சியில் இரண்டு கட்டங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வோண்டும். முதலாவது அனாஜென் (வளர்ச்சி கட்டம்), இரண்டாவது டெலோஜென் (ஓய்வு கட்டம்). ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, வளர்ச்சிக் கட்டம் குறைகிறது, மேலும் ஓய்வெடுக்கும் கட்டம் நீட்டிக்கப்படுகிறது. இதனால் ஹார்மோனின் சுரப்பு மன அழுத்தம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, மருத்துவ நிலை போன்ற பிற காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து இல்லாமை

உடலின் இயற்கையான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால், அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடி இழைகளை வளர்ப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, உடலுக்கு தேவையான அளவு புரதம் கிடைக்கவில்லை என்றால், அது முடியின் வளர்ச்சியை பாதிக்கும். ஃபோலிக் அமிலம் (B9), பயோட்டின் (B7) மற்றும் பல தாதுக்கள் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சி மற்றும் நுண்ணறைகளைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் பிற ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை எல்லாம் சரிவர கிடைக்கவில்லை என்றாலும் முடி உதிர்வு ஏற்படும்.

சிகை அலங்காரங்கள்

கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் அல்லது முடி இழைகளில் பதற்றத்தை உருவாக்கும் வகையிலான சிகை அலங்காரத்தை அவ்வப்போது பின்பற்றுவதும் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post முடி உதிர்தலுக்கு தீர்வு தரும் புதிய ஹோமியோபதி சிகிச்சை! appeared first on Dinakaran.

Related Stories: