மழை, வெயில் காலங்களில் மிகவும் அவதி; செவ்வாய்கிழமை வார சந்தைக்கு கூடாரம் அமைத்து தரப்படுமா..? விவசாயிகள், வியாபாரிகள் வேண்டுகோள்

பெரம்பலூர்: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் செயல்பட்டு வரும் செவ்வாய் வார சந்தை வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு கூடாரம் அமைத்துத் தரப்படுமா…? அடைமழை பெய்தால் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. பெரம்பலூர் நகராட்சியில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை அருகே அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வயல்களில் உற்பத்தி செய்த காய் கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து செல்வார்கள். இவர்களை விட அதிகமாக பெரம்பலூர் மாவட்ட காய்கறி வியாபாரிகளும், வெளி மாவட்ட வியாபாரிகளும் செவ்வாய் வார சந்தையில் கடைநடத்தி காய்கறிகளை விற்பனை செய்வதும் உண்டு. தினசரி காய்கறி மார்க்கெட்டைவிட, காய்கறி சூப்பர் மார்க்கெட்டுகளை விட 20, 30 சதவீதம் விலை குறைவாகவும்,புதிதாகவும் காய்கறிகள் கிடைப்பதால் அதனை வாங்க செவ்வாய் கிழமைதோறும் பெரம்பலூர் நகரில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் கூடி, காய் கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

துறையூர் சாலையில் இயங்கி வந்த காய்கறி வார சந்தையில் பாதிக்கு மேற்பட்ட கடைகள் கீற்றனாலும், சாமியானா துணிகளாலும் அமைக்கப் பட்டிருந்ததால் மலைக் காலங்களில் வியாபாரத்திற்கு பாதிப் பின்றி சமாளிக்க முடிந்தது. இந்த காய்கறி வார சந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் தலைமை மருத்துவ மனை வளாகத்தில் பல்நோக்கு சிறப்புமிகு மருத்துவமனை வளாகம் 5 மாடிக் கட்டிடமாக கட்டுவதற்கு விரிவாக்கம் செய்யப்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வடக்குமாதவி சாலையில், பெரம்பலூர் உழவர் சந்தை இயங்கி வரும் வளாகத்தின் தெற்கு பகுதியில், அதே மதன கோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இடம் ஒதுக்கி நடத்தப்பட்டுவந்தது.

அந்தப் பகுதியில் உழவர் சந்தை காலை நேரத்தில் 3 மணி நேரம்மட்டும் இயங்கப்பட்டு வந்தநிலையில், செவ்வாய் வாரச்சந்தை அன்றைய நாளில் நாள்முழுவதும் இயக்கப்பட்டு வந்தது. இருந்தும் நகரின் குப்பை மேடாக இருந்த அந்தப் பகுதியில் அடை மழை பெய்தால் சேரும் சகதியுமாக விற்பனைக்காக கொட்டி வைத்தக் காய்கறிகளை அள்ளிக்கொண்டு ஒதுங்க இடமின்றி வியாபாரிகளும், வீவசாயிகளும் தவித்து வந்தனர்.

அதற்கும் இடையூறாக கொரோனா தொற்றுப் பரவல் தமிழகஅளவில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததால் வாரச்சந்தையைப் போல 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் அதிகம் கூடுகின்ற நிகழ்வுகளை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக் காததால், செவ்வாய் வார சந்தை தடைசெய்யப்பட்டு காய்கறி விவசாயிகள் வியாபாரிகள் ஆகியோர் வேன்களின், தள்ளு வண்டிகள் மூலம் ஊர் ஊராக சென்று விற்பனை செய்யவும், பெரம்பலூர் நகரில் சாலை ஓரங்களில் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக பெரம்பலூர் நகரில் பாலக் கரையில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி வரையிலான சாலையின் இருபுறமும் காய்கறி வியாபாரிகள் தரைப்பகுதிகளை ஆக்கிரமித்து வாரச் சந்தையைப் போல் இல்லாமல், தினசரி சந்தையைப் போல் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கும் இடையூறாகவே இருக்கிறது. அதேநேரம் வடக்கு மாதவி சாலை உழவர்சந்தை தென்புறம் செவ்வாய் வாரச்சந்தை நடைபெறாமல் நிறுத்தப் பட்டதால், அப்பகுதியில் புதர்கள் மண்டி, பொது மக்கள், கடைவியாபாரிகள் குப்பைகளைக் கொட்டி வந்ததால் அவை அழுகி துர்நாற்றம் வீசிவந்தது. மேலும் அந்தப் பகுதியில் குடிமகன்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வந்தது.

இதனால் அந்த பகுதி சுத்தப்படுத்தப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த செவ்வாய் வாரசந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள், வியா பாரிகள், நகரவாசிகள், சுற்றுவட்டார கிராம பொது மக்கள் மாவட்ட நிர்வாகத் திற்கு வேண்டுகோள் விடுத்துவந்தனர். இதன் எதிரொலியாக சமீபத்தில் நிலத்திற்கு சொந்தமான, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் சார்பாக, உழவர் சந்தை வளாகத்தின் தென் புறம் மீண்டும் செவ்வாய் வாரச் சந்தையை நடத்த ஏற்பாடு செய்து, சில வாரங்களாக செவ்வாய் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

இதனால் காய்கறி வியாபாரிகள், விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த போதும் பருவமழை காலங்களில் அடைமழை பெய்யும் போது வாரச்சந்தையில் காய் கறிகளை சந்தைப்படுத்த பாதுகாப்பான இடவசதி இல்லாமல்தான் உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறையின் சார்பாக அனுமதி வழங்கப்பட்ட கடைகளுக்கு பாதுகாப்பான கூடாரம் அமைத்துத் தரவும், வரிசை எண்களுடன் கடைமேடை அமைத்துத்தரவும், காய்கறி கடைகளுக்கு இடையே போதிய நடைபாதை வசதி ஏற்படுத்தித் தரவும், குறிப்பாக மழைக் காலங்களில் சேற்றில் நடந்து செல்லாதிருக்க கிராவல் பரப்பி, தரமான பாதை வசதி மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரவும், செவ்வாய்க்கிழமை அன்று வடக்கு மாதவி சாலையில் காவல்துறை சார்பாக போக்குவரத்தை சீரமைத்து தரவும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்திற்கும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

The post மழை, வெயில் காலங்களில் மிகவும் அவதி; செவ்வாய்கிழமை வார சந்தைக்கு கூடாரம் அமைத்து தரப்படுமா..? விவசாயிகள், வியாபாரிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: