மதுரையில் கொட்டித் தீர்த்தது கனமழை; கண்மாய் நிரம்பி வழிந்ததால் குடியிருப்பை சூழ்ந்தது வெள்ளம்

மதுரை: மதுரையில் பெய்த கனமழையால், செல்லூர் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாயை ஒட்டிய குடியிருப்புகளுடன், சுற்றிய பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியது. இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் மாணவர்களுடன், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்மழை பெய்து வருவதால், கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து மாலையிலும், இரவிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஓடி, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக செல்லூர் கண்மாய் முழுவதும் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

வீடுகளில் முடக்கம்..
மதுரை செல்லூர் கட்டபொம்மன் நகர் பகுதியில் பெரியார் வீதி, வாஞ்சிநாதன் தெரு, போஸ் வீதி, காமராஜர் தெரு, காமராஜர் தெரு, 50 அடி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது. இப்பகுதிகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் ஏறியதால், நேற்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுடன், வேலைக்கு செல்வோர் என பலரும் பெரும் அவதியடைந்தனர். இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடியே வெளியேறும் அவலம் ஏற்பட்டது. வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டு, வாகன ஓட்டிகளும் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர். குடியிருப்புகளை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியதால், வெளியேற முடியாமல் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கினர்.

மிதக்கும் வாகனங்கள்:
நரிமேடு அவ்வையார் நகர் பகுதியிலும் மழைநீர் சூழ்ந்தது. பந்தல்குடி பகுதியில் கால்வாய் நிரம்பி வெள்ள நீரானது, கோரிப்பாளையத்திலிருந்து ஜம்புரோபுரத்திற்கு பந்தல்குடி சாலையில் புகுந்து நுழைந்தது. வாகனங்கள் வெள்ளநீரின் மீது சென்று வருகின்றன. கோரிப்பாளையம் மேம்பால பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் அறிவித்து, பிரதான சாலையாக பந்தல்குடி சாலை செயல்படும் நிலையில் வெள்ள நீரில் மூழ்கி வருவது, போக்குவரத்து நெரிசல் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷ பூச்சிகளால் அச்சம்…
மழை வெள்ளம் காரணமாக, மதுரை மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட ஆபீசர்ஸ் டவுன், கனகவேல் நகர் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளி்லும் வெள்ளம் போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்கள் மட்டுமல்லாது நடந்து கடக்கவே முடியாத அளவிற்கு இப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி 4வது வார்டு பார்க் டவுன், கார்த்திக் நகர், ரோஜா வீதி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. வெள்ளநீர் தேங்கிக் கிடப்பதால், வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வருவது பொதுமக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதேபோல் மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கோவில்பாப்பாகுடி, சத்தியா நகர் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மேலப்பனங்காடி பேச்சிகுளம் ஊராட்சி 6வது வார்டு பகுதிகளான வேலப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தவளைக் குஞ்சுகள் உருவாகி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதுடன், இவற்றைத் தேடி பாம்புகளும் வீடுகளுக்குள் வருவதாக இப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தை மூழ்கியது:
மதுரை ஆனையூர் உழவர் சந்தைக்குள் மழைத்தண்ணீர் புகுந்துள்ளது. இங்குள்ள கடைகளில் 25க்கும் மேற்பட்ட கடைகள் நீரில் மூழ்கியதால், விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. நேற்று காலையில் உழவர் சந்தைக்குள் கடைகள் போட முடியாத நிலையில், விவசாயிகள் வெளியில் சாலையோரங்களில் காய்கறி கடைகள் போட்டு விற்பனை செய்தனர். இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ள பாதிப்பு விரைவாக சீரமைப்பு
மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் கூறும்போது, ‘‘பல்வேறு பகுதிகளின் 109 கண்மாய்களில் இருந்து வரும் தண்ணீர், செல்லூர் கண்மாயில் விழுந்து வெளியேறும் உபரிநீர்,பந்தல்குடி வாய்க்கால் வழியாக வைகையை சேர்கிறது. இதில் வாய்க்கால் கொள்ளளவு மீறி தண்ணீர் வெளியேறி குடியிருப்புகள் பாதித்துள்ளன. கண்மாய், வாய்க்கால் நீர்வளத்துறையிடம் இருப்பதால் இத்துறையுடன் இணைந்து மாநகராட்சி வேலை செய்து வருகிறது. 109 கண்மாய்களில் எந்தெந்த கண்மாய் நீரை ஆற்றில் திருப்பி விட முடியுமோ, அவற்றை திருப்பி விட்டு தண்ணீர் வரத்தை குறைக்கும் நடவடிக்கையில் நீர்வளத்துறை ஈடுபட்டுள்ளது. வாய்க்காலில் ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல மரங்கள், குப்பைகள் என அத்தனையையும் வெளியில் எடுத்து, உடனுக்குடன் அகற்றி வருகிறோம். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் பாதிப்பை தவிர்க்க 2.6 கிமீட்டர் தூரமிக்க பந்தல்குடி வாய்க்கால் முழுமையையும் நீர்வளத்துறையினருடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் தனியாக ஒதுக்கப்பட்ட திறன்மிகு 40 பணியாளர்களைக் கொண்டு தீவிர கவனம் காட்டி, சீரமைப்பு பணியை விரைவாக மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

வெள்ளத்தில் சிக்கி வியாபாரி பலி
மதுரை, கோரிப்பாளையம் அருகே பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (45). பால் வியாபாரி. மனைவி மகன், மகள் உள்ளனர். கனமழையால் கோரிப்பாளையம் அருகே பந்தல்குடி கால்வாயில் அதிகளவிற்கு குப்பை அடைத்துக் கொண்டது. இதனை அகற்றுவதற்காக, பாண்டியராஜன் கால்வாய்க்குள் இறங்கினார். எதிர்பாராத நிலையில், திடீரென தண்ணீர் அவரை இழுத்துச் சென்றது. குப்பைகளோடு சிக்கிய பாண்டியராஜனை மீட்க அப்பகுதியினர் போராடியும் முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு பிறகு பாண்டியராஜன் உடல் மீட்கப்பட்டது.

முதியோர், சிறுவர்கள் படகு மூலம் மீட்பு
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கூடல்நகர், பாண்டியன் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் வழியாக மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. வீட்டைச்சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் இப்பகுதியினர் வீட்டிற்குள் முடங்கினர். மருத்துவ தேவைக்குரிய வயதானவர்கள், சிறுவர்கள் படகு மூலம் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டு, வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர். பாண்டியன் நகர், பெரியார் நகர் அங்கன்வாடி மையங்களுக்குள்ளும் மழை நீர் புகுந்து, சமையலறைக்குள் சென்றதால் மையம் மூடப்பட்டது. தகவலறிந்து வந்திருந்த பெற்றோர் அவசர அவசரமாக குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இத்துடன் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவைகளையும் மழை வெள்ளநீர் சூழ்ந்தது.

அதிமுகவினரின் ‘படகு சூட்டிங்’
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் பாண்டியன் நகர் பகுதியில் மழைநீர் புகுந்திருந்த நிலையில், மதுரை நகர் மேற்கு 6ம் பகுதி அதிமுக செயலாளர் சித்தன், கூடல் நகர் அதிமுக வட்டக் கழக செயலாளர் நாராயணன், விஜயகுமார் ஆகியோர் ஒரு படகை கொண்டு வந்து ரோட்டோரத்தில் இருந்த முதியவர் சிலரை மட்டும் அதில் ஏறச் செய்து, முழங்காலுக்கு கீழே, சாதாரணமாக நடந்து செல்லக் கூடிய அளவில் இருந்த நீரில் படகை இழுத்தபடி கரைக்கு கொண்டு வந்து விட்டனர். படகில் முதியோரை ஏற்றியதும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து, விளம்பரத்தை மையப்படுத்தி ஒரு சூட்டிங் போல நடந்து கொண்டது அங்கிருந்தோரை முகம் சுழிக்கச் செய்தது.

இப்பகுதியின் கூடல் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் வழியாக மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. பாண்டியன் நகர், பெரியார் நகர் அங்கன்வாடி மையங்களுக்குள்ளும் மழை நீர் புகுந்து, சமையலறைக்குள் சென்றதால் மையம் மூடப்பட்டது. தகவலறிந்து வந்திருந்த பெற்றோர் அவசர அவசரமாக குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இத்துடன் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவைகளையும் மழை வெள்ளநீர் சூழ்ந்தது.

The post மதுரையில் கொட்டித் தீர்த்தது கனமழை; கண்மாய் நிரம்பி வழிந்ததால் குடியிருப்பை சூழ்ந்தது வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: