×

ரெய்டு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ₹25,000 லஞ்சம் டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது சேத்தியாத்தோப்பில் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு, அக். 24: ரெய்டு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்த டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் சேத்தியாத்தோப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமார் வருந்திருந்தார். அப்போது சேத்தியாத்தோப்பில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு தீபாவளியை முன்னிட்டு கூடுதல் கவுண்டர்கள் திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த கூட்டம் நடப்பது குறித்து கிடைத்த தகவல் அடிப்படையில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர்கள் சுந்தராஜ், திருவேங்கடம், அன்பழகன் தலைமையிலான குழுவினர் ரகசியமாக வருகை தந்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த சிலர், அவ்விடத்தை விட்டு நைசாக கலைந்தனர். அப்போது மாவட்ட மேலாளர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் திருவேங்கடத்துக்கு இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கண்டு கொள்ளாமல் இருக்க 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க முற்படவே, உடனடியாக அவரை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் ராதாகிருஷ்ணன் இருவரையும் சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவரிடமும் தீவிர விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் கடலூர் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post ரெய்டு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ₹25,000 லஞ்சம் டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது சேத்தியாத்தோப்பில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Chetiathop ,Chetiathoppu ,Cuddalore District Chethiyathoppu Government Hospital ,Chethiyathoppu ,Kattumannarkovi ,Srimushnam ,Sethiyathop ,
× RELATED குமரியில் டிச.1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் ஆணை..!!