×
Saravana Stores

சென்னை – செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை அச்சிறுப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

Electric Train, Chengalpatty, CHnenai beach, Achirapakkamமதுராந்தகம் : சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் மூலமாக தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பணி நிமித்தமாக சென்னை சென்று வருகின்றனர். இதில், பள்ளி-கல்லூரி மாணவ – மாணவியர், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அவரின் உறவினர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் அடங்குவர். இந்த மின்சார ரயில் பயணம் என்பது பேருந்து போக்குவரத்தை விட மிக எளிதானது, கட்டணம் குறைவானது, பயண நேரமும் குறைவானது.

இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற காரணங்களால் பேருந்து போக்குவரத்தை விட இந்த ரயில் போக்குவரத்தை, மிக அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செங்கல்பட்டு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் பயணிக்கும் மக்கள் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை. செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர், பவுஞ்சூர், கடப்பாக்கம், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் தினந்தோறும் இந்த பகுதிகளிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் அல்லது இருசக்கர வாகனத்தின் மூலமாகவும் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை சென்று அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அவ்வாறு ஒரு நாளைக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் சென்னை சென்று வருகின்றனர். இதில், சுமார் 1 லட்சம் பேர் செங்கல்பட்டை தாண்டிய மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள்.இந்நிலையில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை தினந்தோறும் இயக்கப்படும் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளில் சிலவற்றையாகிலும் காலை, மாலை முக்கியமான அலுவலக நேரங்களில் மட்டுமாகிலும் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் வரை மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, மதுராந்தகம் ரயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள கருங்குழி, வேடந்தாங்கல், எல்.எண்டத்தூர், முதுகரை, ஜமீன் எண்டத்தூர், செய்யூர், பவுஞ்சூர், அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், தினசரி பயணிகளும் பயனடைவார்கள். இதேபோன்று மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், ரயில் நிலையங்களை சுற்றியுள்ள தொழுப்பேடு, ஆத்தூர், கடமலைப்புத்தூர் பெரும்பேர் கண்டிகை, ஒரத்தி, கீழ் அத்திவாக்கம், கயப்பாக்கம், சூனாம்பேடு, சித்தாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்களும் பயனடைவார்கள்.

இதேபோன்று மதுராந்தகம் – செங்கல்பட்டு இடையே உள்ள கருங்குழி, படாளம், ஒத்திவாக்கம், ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கும் வசதியாக இருக்கும். மேலும், தற்போதைய சூழ்நிலையில் சென்னை பெரு நகரத்தில் வீட்டு வாடகை அதிகம், வாகன நெரிசல் போன்ற காரணங்களினால் புகை மாசு அதிகம் காரணமாக ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து தங்கள் குடியிருப்பை மாற்றி மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகளில் குறைந்த வாடகையில் சுகாதாரமான சூழ்நிலையில் குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் சென்னை சென்று பணிபுரிந்து வீடு திரும்புகிறார்கள்.தற்போது, இவர்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் இருந்து சாலை மார்க்கமாக மேல்மருவத்தூர், மதுராந்தகம் வழியாக பேருந்துகளிலோ இருசக்கர வாகனங்களிலோ செங்கல்பட்டு வரை சென்று அங்கிருந்து ரயில் பிடித்து செல்கின்றனர். இதனால், அவர்களின் நேரமும் பொருளாதாரமும் வீணடிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் இந்த மின்சார ரயில் சேவையினை செங்கல்பட்டின் தொடர்ச்சியாக அங்கிருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவிற்கு அச்சிறுப்பாக்கம் வரை இயக்க வேண்டும் என்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வாழும் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள், தினந்தோறும் சென்னை சென்று வேலை செய்து திரும்புகின்றனர். இதேபோன்று, இப்பகுதிகளில் அரசு கல்லூரி இல்லாததால் இப்பகுதி மாணவ – மாணவியரும் தினந்தோறும் சென்னை சென்று படித்துவிட்டு வருகின்றனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள், வியாபார ரீதியாக செல்பவர்கள் என ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னைக்கு பயணம் செய்கின்றனர்.

எனவே, அவர்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் மின்சார ரயில் சேவையினை காலை, மாலை நேரங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் நேரங்களில் மட்டும் சென்னை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சேவைகளை அச்சிறுபாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

100 கிலோ மீட்டருக்குள்…

மின்சார ரயில் சேவை என்பது அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என ரயில்வே சட்ட விதிகளில் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் சென்னை கடற்கரையில் இருந்து அச்சிறுப்பாக்கம் வரை 97 கிலோ மீட்டர் தூரமே உள் ளது. எனவே, ரயில்வே துறையின் விதிகளின்படி அவர்கள் நிர்ணயத்துள்ள தூரத்திற்கு குறைவான தூரத்திலேயே இந்த மதுராந்தகம் மேல்மருவத்தூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் பயன்பெறுவர்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் இப்போது இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இதன்காரனமாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் ஆன்மிக பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

The post சென்னை – செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை அச்சிறுப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai-Chengalpattu ,Achirpakkam ,Madhurandakam ,Chennai ,Tambaram ,Chengalpattu ,
× RELATED அச்சிறுப்பாக்கம் விசிக சார்பில் போதை...