சென்னை கோட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆர் கோடு கட்டண முறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆர் கோடு கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கியூஆர் கோடு பயன்படுத்தி யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பெரிய ரயில் நிலையங்களில், ரயில் முன்பதிவு, நடைமேடை டிக்கெட், முன்பதிவு இல்லாத டிக்கெட், பார்சல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற, கியூஆர் கோடு வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி, சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளின் வசதிக்காக இந்த முறை தற்போது சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் விதமாக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு மையம், லக்கேஜ், பார்சல் சேவை மையம் என அனைத்திலும் கியூஆர் கோடு கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் செயல்முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடர்பான சிக்கல்களை தவிர்க்கவும், பயணச்சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் நோக்கத்திலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு மையங்களில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்த பின்னர் யுபிஐ செயலிகளின் மூலம் பயணச் சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதி செய்தவுடன் பயணச்சீட்டு வழங்கப்படும். பயணச்சீட்டு மையத்தில் காத்திருப்பு காலத்தை குறைக்கவும், பயணிகளுக்கு ஒரு வசதிகரமான பயணத்தை வழங்கவும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கோட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் கியூஆர் கோடு கட்டண முறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: