இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதலால் புதிய தலைவர் பதவியை ஏற்க தயங்கும் ஹமாஸ் ‘தலைகள்’: யஹ்யா சின்வார் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் பீதி


லண்டன்: யாஹ்யா சின்வார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதலால் ஹமாஸ் தலைவர்கள் பீதியான நிலையில், தங்களது புதிய தலைவரை அறிவிப்பதில் தயங்கி வருகின்றனர். கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காசா பகுதி முழுவதும் அழிக்கப்பட்டது. ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அவர்கள் எவ்வளவு ஆழமான சுரங்கப்பாதையில் இருந்தாலும், இஸ்ரேலின் கூர்மையான பார்வை மற்றும் கொடிய தாக்குதலுக்கு அவர்களால் தப்ப முடியவில்லை. சமீபத்தில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். அதனால் ஹமாசின் முதுகு உடைந்துவிட்டது என்றே கூறலாம். தற்போது ஹமாசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மற்றொரு கோணத்தில், இஸ்ரேலுடன் முழு பலத்துடன் போரை ெதாடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அதேநேரம் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள 101 பணயக்கைதிகளை விடுவித்தால், போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் தரப்பில், காசாவில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் வரை பணயக்கைதிகள் விடுவிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆண்ட்ரியாஸ் க்ரீக் கூறுகையில், ‘ஹமாசுக்கு புதிய தலைவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அப்படியே ஹமாஸ் தனது புதிய தலைவரை நியமித்தாலும், அவர் யஹ்யாவை விட அதிகாரம் படைத்தவராக இருக்க முடியாது. காசாவிற்கு வெளியே வசிக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும், காசாவின் களத்தில் இருக்கும் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. யாஹ்யா சின்வார் கொலைக்குப் பிறகு, காசாவுக்கு வெளியில் இருந்து ஒரு ஹமாஸ் தலைவரை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மூசா அபு மர்ஸூக் என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம். இவரை தவிர கத்தாரில் வசிக்கும் ஹயா என்பவரும் தலைவராக வாய்ப்புள்ளது. அதேபோல் காசாவிற்கு வெளியே வசிக்கும் கலீத் மெஷாலின் பெயரும் அடிபடுகிறது. இவர் 2017ம் ஆண்டு வாக்கில் ஹமாசின் தலைவராக இருந்தார். இந்த பட்டியலில் யாஹ்யா சின்வாரின் தம்பி முகமது சின்வார் பெயரும் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் முன்பு போல் ஹமாஸ் தலை தூக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது. இவ்வாறான நிலையில் காசாவில் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம்’ என்றார். ஹமாசின் பல தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதால், புதிய தலைவராக தேர்வு செய்வதிலும், நியமனம் செய்து அறிவிப்பதிலும் பல்வேறு ெநருக்கடிக்கு ஹமாஸ் ஆளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதலால் புதிய தலைவர் பதவியை ஏற்க தயங்கும் ஹமாஸ் ‘தலைகள்’: யஹ்யா சின்வார் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் பீதி appeared first on Dinakaran.

Related Stories: