உலக நாடுகளின் வறுமை பட்டியலில் இந்தியா முதலிடம்: 23.40 கோடி பேர் பரிதவிப்பு, ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஐநா: 2024ம் ஆண்டில் உலகளவில் வறுமையில் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. ஐநா வளர்ச்சி திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பு இணைந்து கடந்த 2010ம் ஆண்டு முதல் பல பரிமாண வறுமை குறியீடுகளை வௌியிட்டு வருகிறது. இந்த பல பரிமாண வறுமை குறியீடு என்பது வீட்டு வசதி, சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிபொருள், ஊட்டச்சத்து, தண்ணீர் மற்றும் குழந்தைகள் பள்ளி வருகை உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

2024ம் ஆண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமை குறியீடு தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், “போர் மற்றும் அமைதியின்மை நிலவும் நாடுகளில் வசிக்கும் 45.50 கோடி மக்கள் வறுமையில் சிக்கி உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்குள்பட்டவர்கள். உலகளவில் 27.9 சதவீதம் குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிராந்திய ரீதியாக 83.2 சதவீதம் பேர் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர்.

தற்போது நடத்தப்பட்ட ஆய்வின்படி 112 நாடுகளில் வசிக்கும் 630 கோடி பேரில் 110 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். இந்த ஆய்வின்படி முதலிடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 23.40 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, பாகிஸ்தானில் 9.30 கோடி மக்களும், எத்தியோப்பியாவில் 8.60 கோடி மக்களும், நைஜீரியாவில் 7.40 கோடி பேரும், காங்கோ நாட்டில் 6.60 கோடி பேரும் வறுமையில் உள்ளனர்.

அண்மை காலங்களில் நாடுகளுக்கிடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். போருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிற பாதிப்புகள்
போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களில் நான்கு பேரில் ஒருவர் மின்வசதியின்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம் போர் உள்ளிட்ட சிக்கல்கள் இல்லாத நாடுகளில் வசிக்கும் 20 ஏழைகளில் ஒருவர் மட்டுமே மின்வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளார். போர் நடக்கும் நாடுகளில் 4.4 சதவீத குழந்தைகளின் கல்வி, 7.2 சதவீத சத்துணவு பாதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

 

The post உலக நாடுகளின் வறுமை பட்டியலில் இந்தியா முதலிடம்: 23.40 கோடி பேர் பரிதவிப்பு, ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: