ராஜகோபுர தரிசனம்! : சாரங்கபாணி கோயில்

கும்பகோணத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இது திவ்ய தேசங்களில் ஒன்றானது. விஷ்ணுவின் 108 கோயில்கள் அனைத்தும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 12 ஆழ்வார்களால் போற்றப்பட்டுள்ளன. சாரங்கபாணி கோயில் காவேரியை ஒட்டி அமைந்துள்ளது மற்றும் பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். இடைக்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசு மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் அவர்களின் காலங்களில் இந்தக் கோயிலுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பினை கொடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கோயில் ஒரு பெரிய கிரானைட் சுவர் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரம் பதினொரு அடுக்குகள் மற்றும் 173 அடி உயரம் கொண்டது. கோயிலின் பொற்றாமரை குளம் மேற்கு நுழைவுவாயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

புராணக்கதை

ஒருமுறை, பிருகு முனிவர் விஷ்ணுவை பாற்கடலில் சந்திக்க விரும்பினார். ஆனால் விஷ்ணு அவர் வந்ததை அறியாமல் உறங்கிக் கொண்டிருக்க, கோபமுற்ற பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைத்தார். விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் லட்சுமி முனிவரின் இச்செயலால் கோபம் கொண்டார். ஆனால் இறைவன் முனிவரை தண்டிக்காததால், வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்து பத்மாவதி அவதாரம் எடுத்தாள். தேவியின் கோபத்தை தணிக்க விஷ்ணு கோயிலில் பாதாள அறையில் பாதாள னிவாசராக காட்சி அளித்தார். தன் தவறை உணர்ந்த பிருகு முனிவர் தேவியிடம் மன்னிப்பு கோரி, தனக்கு மகளாக பிறக்குமாறு வேண்டினார்.

அடுத்த ஜென்மத்தில் முனிவர் ஹேமரிஷியாகப் பிறக்க, அவரின் மகளாக கோமளவல்லியாக லட்சுமி பிறந்தார். ஆயிரம் தாமரைகளுக்கு மத்தியில் பொற்றாமரைக் குளத்திலிருந்து லட்சுமி வெளிப்பட்டதால், கோமளவல்லி என்று பெயர் பெற்றார். விஷ்ணு தன் இருப்பிடமான வைகுண்டத்திலிருந்து குதிரைகள் மற்றும் யானைகள் இழுக்கப்பட்ட தேரில் ஆராவமுதனாக பூமிக்கு வந்து லட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

கட்டிடக்கலை

சாரங்கபாணி ேகாயில் கும்பகோணத்தில் உள்ள மிகப்பெரிய விஷ்ணு கோயில். இதன் கோபுரம் அங்குள்ள மற்ற கோயில்களை விட உயரமானது. கோயிலில் மேலும் ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தில் பல்வேறு சமயக் கதைகளை சித்தரிக்கும் உருவங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியும், பொற்றாமரை குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியேயும் அமைந்துள்ளது. கோயிலின் மைய சன்னதி குதிரைகள் மற்றும் யானைகளால் இழுக்கப்பட்ட தேர் வடிவத்தில், இருபுறமும் திறப்புகளுடன், சாரங்கபாணி தேரில் சொர்க்கத்திலிருந்து இறங்கியதைக் காட்டுகிறது.

யானை அல்லது குதிரையால் இழுக்கப்படும் தேரை உருவகப்படுத்தும் கட்டிடக்கலைகள் கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், சிகரகிரீஸ்வரர் கோயில், குடுமியாமலை, நாகேஸ்வர சுவாமி கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில், திருவரங்கேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. கோயிலின் மேற்குப் பகுதியில் ஹேமரிஷி முனிவரின் சிற்பம் உள்ளது. கருவறைக்கு 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக செல்ல வேண்டும். தேர் வடிவில் உள்ள கருவறை வெளிப்புற நுழைவாயிலை நோக்கி துவாரபாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது.

கோயிலின் மைய சன்னதியில் சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. ஹேமரிஷி முனிவர், லட்சுமி மற்றும் உற்சவப் படங்கள் ஆகியவை கருவறைக்குள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தக்ஷணாயன வாசல் என இரண்டு படிக்கட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை உத்தராயண வாசலும், தக்ஷணாய வாசல் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படுகிறது. மரத்தால் செதுக்கப்பட்ட இரண்டு ஊர்வலத் தேர்கள் ராஜகோபுரத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. திருவிழாக் காலங்களில் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் கோயில் தேர்களைப் பின்பற்றி இக்கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்கள் ஒவ்வொன்றும் 300 டன் எடையுடையது. ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல், மே மாதங்களில் பிரம்மோத்ஸவத்தின் போதும், ஜனவரி, பிப்ரவரி ரத சப்தமியின் போதும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு கோயில் தேர் இழுக்கப்படும். இக்கோயிலின் முதல் தேர் திருமங்கை ஆழ்வாரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது.

திலகவதி

The post ராஜகோபுர தரிசனம்! : சாரங்கபாணி கோயில் appeared first on Dinakaran.

Related Stories: