அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் ஐப்பசி மாதத்தின் பெருமைகள்!!!

ஜோதிடக் கலையில் “வித்யாகாரகர்” எனவும், கல்விக்கு அதிபதி கிரகம் என்றும் பூஜிக்கப்படும் புதனின் ராசியான கன்னியிலிருந்து மாறி, சூரியபகவான் அவரது நீச்ச ராசியான (பலம் குறைதல்) துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலமே, “ஐப்பசி மாதம்” எனவும், துலாம் மாதம் எனவும் போற்றப்படுகிறது.மற்ற மாதங்களைவிட, ஐப்பசி மாதத்திற்கு என உலகளாவிய ஓர் தனிப் பெருமை உண்டு! இந்த ஐப்பசி மாதத்தில்தான், பாரதப் புண்ணிய பூமி மட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்திலுமே கொண்டாடப்படும் “தீபாவளி” (தீப-ஒளி) பண்டிகை நிகழ்கிறது, “நரக சதுர்த்தி ஸ்நானம்” எனப் போற்றப்படும் தீபாவளி நன்னாளின் விடியற்காலையில் அனைத்து தீர்த்தங்களிலும் (நதிகளிலும்) தடாகங்களிலும், நீர்நிலைகளிலும் பரம பவித்ரமான கங்காதேவி ஆவிர்பவிப்பதாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அனைவரும் புனித நீராடி, புத்தாடை அணிந்து, பல வித இனிப்பு வகைகளை உண்டு களிக்கின்றனர். வீடுகள்தோறும், பலவகை தீபங்கள் ஏற்றி வைத்து, பூஜிக்கின்றனர்.

அந்த ஆண்டில் திருமணம் ஆன புதுமணத் தம்பதியினரைப் பெண்வீட்டினர், அழைத்து, புத்தாடைகள் கொடுத்து, கௌரவிக்கின்றனர். இதனை “தலை தீபாவளி” (முதல் தீபாவளி) எனக் காலம் காலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். தீபாவளியின் முதல் நாள் பின்னிரவில் பக்தியுடன் நீராடுவது அறிந்தோ அறியாமலோ செய்துள்ள அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே உறுதியுடன் நிலவிவருகிறது!!அன்றைய தினம்தான், அஷ்ட (8) ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதியான ÿமகாலட்சுமியையும், குபேரனையும் பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஏற்படும் பணப் பற்றாக்குறை, வறுமை ஆகியவை நீங்கிவிடும் என்ற நம்பிக்கையுடன் ÿமகாலட்சுமியையும், குபேரனையும் மக்கள் வழிபடுகின்றனர்!

தீபாவளிப் பண்டிகையின் வரலாறு..!

துவாபர யுகத்தில் நரகன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான்! மிகக் கடினமான தவமியற்றி, பிரும்ம தேவரிடமிருந்து, “தனது தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது..!” என்ற வரத்தைப் பெற்றான்.அசுரர்கள் அனைவரும் மிகவும் கெட்டிக்காரர்கள்! அறிவிற்சிறந்தவர்கள்!! எத்தகைய தவத்தினாலும் சாகா வரத்தினைப் பெற இயலாது என்பதை உணர்ந்த அவர்கள் வேறு பல யுக்திகளைக் கையாண்டனர். எந்தத் தாய்க்கு, தனது மகனைக் கொல்ல மனம் வரும்…? இதனையுணர்ந்த நரகன், இத்தகைய வரத்தினை பிரும்ம தேவரிடமிருந்து பெற்றிருந்தான்! நாளுக்கு நாள் நரகனின் கொடிய செயல்கள், “இனியும் தாங்க முடியாது…!” என்ற அளவிற்கு வளர்ந்த போது, பகவான், ÿகிருஷ்ணன், தனது ரதத்தில் ஏறிச் சென்று, அவனுடன் போர் புரிந்தார்!

தேரோட்டியாக, கண்ணனின் தேவியான, ÿசத்தியபாமா உதவி புரிந்தாள்.நரகன் செலுத்திய அஸ்திரம் ஒன்றினால், அடிபட்டதுபோல் மயங்கி, தேரிலேயே சாய்ந்துவிட்டார், ÿ கண்ணன்! விபரீதமான அந்நிலையில், வேறு வழியின்றி, சத்திய பாமாவே ஆயுதமெடுத்து, நரகனைக் கொன்றாள்!உயிர் பிரியும் முன், நரகாசுரன் தனது தவறுகளை மன்னிக்கும்படி வேண்டினான், மேலும், தான் இறந்த நாளை மக்கள் அனைவரும், மங்கல ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிவைத்து, பூஜிக்க வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றான். இதுவே அன்று முதல், தீப ஒளிப் பண்டிகையாக ஆண்டுதோறும் உலகெங்கிலும் ெகாண்டாடப்பட்டு வருகிறது!இந்திய நன்நாட்டில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி, பெரும்பான்மையான உலக நாடுகள் அனைத்திலும் “தீபாவளிப் பண்டிகையாக” கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி் மாதத்திற்கு இப்பண்டிகை ஓர் தனிப் பெருமையை அளித்துள்ளது, வீடுகள் மட்டுமன்றி, அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு, “போனஸ்” என்ற பெயரில் பணமும், இனிப்பு வகைகளும், புத்தாடைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.இத்தகைய விசேஷ புகழ்பெற்ற தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் 13-ம் தேதி (30-10-2024) புதன்கிழமை இரவு, 14-ம் தேதி (31-10-2024) அன்று அதிகாலையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐப்பசி 01 (18-10-2024) – வெள்ளிக்கிழமை துலா காவேரி ஸ்நானம் ஆரம்பம்! அனைவரும் ÿரங்கம் செல்ல வேண்டும்…

கங்கையில் புனிதமாய் காவிரி நடுவு
பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள்
மால் இறைவன் ஈசன் கிடந்ததோர்
கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து
வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
– தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கங்கையைவிடப் புனிதமான காவிரி ஆற்றின் இனிமையாலும், அழகாலும் அனைவரின் பாவங்களை நொடிப் பொழுதில் போக்குபவளுமாகிய காவிரியில் இந்நன்னாளில் ஸ்நானம் செய்தால் மகத்தான புண்ணிய பலனைப் பெறுவீர்கள்.

ஐப்பசி 11 (28-10-2024) திங்கட்கிழமை : கோவத்ஸ துவாதசி. இன்றைய தினத்தில், பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில், கன்றுடன்கூடிய நாட்டுப் பசுவிற்கு, மஞ்சள், குங்குமமிட்டு, மலர்கொண்டு அர்ச்சித்து, பசும்புல்லைக் கொடுத்து வணங்கினால், லட்சுமி கடாட்சம் நம் இல்லத்தில் நித்திய வாசம் புரிவாள்.

ஐப்பசி 12 (29-10-2024) செவ்வாய்க்கிழமை: யம தீபம் – இன்று, வீட்டின் பூஜையறையில், ÿயமதர்ம ராஜருக்கு, நெய் தீபம் ஏற்றி வைத்து, யம தர்ம ராஜரைப் பூஜிப்பது, நோயற்ற வாழ்வையும், நீண்ட ஆயுைளயும் அளிக்கும். மாலை நேரத்தில் வீட்டின் வெளிப்புறத்தில் கோலமிட்டு, தெற்கு நோக்கி ஆறு அல்லது ஒன்பது நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால், வீட்டிலுள்ள அனைவரும் நோய் – நொடியற்ற, தீர்க்காயுளுடன்கூடிய (இளம் பிராயத்தில் மரணம் சம்பவிக்காது) மனநிறைவான வாழ்க்கைத் துணையுடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள். மேலும், இன்று தனத்திரயோதசி ஆகையால், இன்றைய தினத்தில் ஸ்வர்ணம் (தங்கம்) வாங்கினால், வாழ்நாள் முழுவதும் உங்கள் வீட்டிற்கு தங்கத்திற்குத் தட்டுப்பாடு ஏற்படாது. அபரிமிதமாக வளரும்.

ஐப்பசி 13 (30-10-2024) புதன்கிழமை இரவு நரக சதுர்த்தி ஸ்நானம். ÿதன்வந்தரி பகவான் அவதார தினம்.

ஐப்பசி 14 (31-10-2024) வியாழன் தீபாவளிப் பண்டிகை. இன்றைய தினத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள்ளாக அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்த பிறகு, ÿமகாலட்சுமி – குபேர பூஜை செய்தல் சாலச் சிறந்தது.

ஐப்பசி 15 (01.11.2024) வெள்ளிக்கிழமை அமாவாசை பித்ருக்களைப் பூஜிக்கவேண்டிய புண்ணிய தினம். மேலும், இன்று கேதார கௌரி பூஜை. சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுத்து, ரவிக்கைத் துண்டு கொடுத்து வணங்கினால், உங்கள் வீட்டிலுள்ள அனைத்து திருமணமான பெண்களும், தீர்க்க சுமங்கலிகளாக பரிமளிப்பர்.

ஐப்பசி 16 (02.11,2024) சனிக்கிழமை கந்தர் சஷ்டி விரதம் ஆரம்பம்.

ஐப்பசி 17 (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை: யம துதியை – யம தர்ம ராஜரை பூஜிப்பது நீண்ட ஆயுைளையும் நோயற்ற வாழ்வையும் பெற்றுத் தரும். பூஜை முடிந்தபின், அவரவர் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று, தங்களால் இயன்ற சன்மானங்களை (வெகுமதிகளை) கொடுத்தால், அனைவரும் ஒருவருக்கொருவர் அந்நியோன்ய பாவத்துடனும், ஒற்றுமையுடனும், மனமகிழ்ச்சியுடனும் வாழ்வர்.

ஐப்பசி 21 (07.11.2024) – வியாழக்கிழமை : கந்தர் சஷ்டி விரதம் – சூரசம்ஹாரம். திருச்செந்தூர், வடபழனி, மயிலம், திருத்தணி, சிக்கில் தரிசனம் விசேஷ புண்ணிய பலன்களைத் தரவல்லவை.
ஐப்பசி 24 (10.11.2024) – ஞாயிற்றுக்கிழமை : அட்சய நவமி. இன்றைய நன்நாளில் பூசணிக்காய் அல்லது பரங்கிக்காய்களை தானம் செய்வதால், கண் திருஷ்டி கழிவதுடன், பாவங்கள் நம்மைவிட்டகலும்!
ஐப்பசி 26 (12.11.2024) – மகரிஷி ÿயாக்ஞவல்கியர் அவதார தினம்.
ஐப்பசி 27 (13.11.2024) – பிரதோஷம். மாலையில் சிவ பெருமானின் தரிசனம் அனைத்துப் பாவங்களையும் போக்கும்.

ஐப்பசி 28 (14.11.2024) – வியாழக்கிழமை : வெண்பனி, முத்து, வலம்புரிச் சங்கையொத்த நிறத்தோனும், தேவர்கள் அமுதம் ெபறவேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவனும், நால்வகை வேதங்களாகிய, ருக், யுஜூர், ஸாம, அதர்வண வேதங்களாலும், ஸோமன் என்றழைக்கப்படுபவனும், பின்னமாகியிருந்தாலும், சிவபெருமானின் ஜடாமுடியில் செருக்குடன் வீற்றிருப்பவனும், மாத்ருகாரகரும், மனித மனங்களை ஆட்டிவைப்பவனும், அதனாலேயே மனோகாரகன் என்றழைக்கப்பெறுபவனும், நடுநிலை தவறாமை, அறிவு, ஆற்றல், ஆனந்தம், புகழ், நறுமணம், அழகு அனைத்துவித சுகபோகங்களையும் தந்தருளி அனுபவிக்கச் செய்பவனும், குரு மற்றும் சுக்கிர பகவானுடன் சேர்க்கையால், தனது அளவு கடந்த இன்னருளை அளித்தருள்பவனும், சாயாக் கிரகங்களைத் தவிர ஏனைய அறுவரும் நட்புக் கிரங்களாகக் கொண்டவனும், ரிஷபம் உச்சவீடாகவும், கடகம் சொந்த வீடாகவும், விருச்சிகம் நீச்சமாகவும் கொண்டுள்ளவனும், “சுபக் கிரகம்” எனப் போற்றிக் கொண்டாடப்படுபவனுமாகிய சந்திர ஜெயந்தி! இன்றைய தினத்தில், நவக்கிரக சந்நதிக்குச் சென்று, சந்திர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து, மல்லிகை, முல்லை, வெண்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால், ஜனன ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள சந்திர தோஷம் விலகிவிடும்.

ஐப்பசி 29 (15.11.2024) – வெள்ளிக்கிழமை : சீக்கிய குருநானக் அவதார தினம். மேலும், இன்றைய தினம் அனைத்து கோயில்களிலும் அன்னாபிஷேகம் தரிசித்தாலே அன்னத்திற்கு எக்காலத்திலும் பஞ்சமேற்படாது. அனைத்து உயிர்களுக்கும் ஜீவநாடியான உணவை வழங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை அன்னத்தின் வடிவமாகவே காண்கிறோம். காரணம், உணவின்றி உயிர்கள் இல்லை. இன்றைய தினத்தில் எம்பெருமானின் திருமேனியில் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு சாதமும் சிவபெருமானின் அம்சமாகின்றது. அன்னாபிஷேகத்தை தரிசிப்போருக்கு கோடி சிவ தரிசனம் செய்த புண்ணியப் பலனைப் பெறுவர்.இத்தகைய தெய்வீகப் பெருமைகளைக் கொண்ட, ஐப்பசி மாதத்தின் ராசி பலன்களை, ஷோடஸ ஸதவர்க்கம் எனும் துல்லிய ஜோதிடக் கணிப்பின் மூலம் கணித்து, எமது “தினகரன்” வாசக பெருமக்களுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.இனி இம்மாதத்தின் ராசி பலன்களை ஆராய்வோம்!

The post அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் ஐப்பசி மாதத்தின் பெருமைகள்!!! appeared first on Dinakaran.