ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோமாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான்  திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஈசனின் கூத்து பேசப் பெறுகின்றது. கூத்துகளில் பாண்டரங்கமும், கொடுகொட்டியும், கபாலமும் சிவனாரின் ஆடல்களாகச் சங்க இலக்கியமான கலித்தொகையிலும், பின்னர் மலர்ந்த சிலம்பு என்னும் காப்பியத்திலும் எடுத்துரைக்கப் பெறுகின்றன. திருமூலர் தில்லைக் கூத்துத் தரிசனத்தின் சிறப்பைக் கூறியுள்ளார். காரைக்காலம்மையாரோ அப்பனின் திருக்கூத்து பற்றியும், அவன் ஆடலுக்குரிய இசைக் கருவிகள் பற்றியும் இனிய தமிழ்ப் பாக்களால் எடுத்துரைத்துள்ளார்.

மூவர் தேவாரப் பாடல்களிலும், மணிவாசகரின் திருவாசகத்திலும் கூத்திறையின் தோற்றப்பொலிவு பரக்கப் பேசப்பெறுகின்றன. பன்னிரு திருமுறைகளிலும் ஆடல்வல்லானின் அற்புதக் கூத்து பற்றி பேசாத நூலே இல்லை எனலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பண்டு முதல் ஆடல்வல்லானின் திருக்கூத்து பேசப்பெற்றாலும், கூத்திறையின் கோலம் காட்டும் பண்டைய திருமேனிகளை நாம் கால வெள்ளத்தில் இழந்துவிட்டோம். இருப்பினும் மகேந்திர பல்லவன் காலந்தொட்டு (கி.பி. 6 – 7ஆம் நூற்றாண்டு) தொடர்ச்சியாக அத்திருவடிவக் காட்சிகளை நாம் பல்வேறு கோயில்களில் கண்டுகளிக்க இயலுகின்றது.

முற்காலச் சோழர் படைப்புக்களில் குறிப்பாகச் செம்பியன் மாதேவியார் எடுத்த திருக்கோயில்களில் ஆடல்வல்லானின் சிற்பம் கோஷ்ட திருமூர்த்தமாக அமைக்கப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் செம்பில் வடிக்கப்பெறும் கலையும் உன்னத நிலை பெற்றது. பராந்தக சோழன், செம்பியன் மாதேவியார், மதுராந்தக உத்தம சோழர், ராஜராஜன், ராஜேந்திரன் காலத்திய ஆடவல்லான் கற்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் தனிச்சிறப்புடையவையாய் திகழலாயின.

பஞ்ச பூத தலங்களில் ஆகாசம் என்னும் தத்துவம் உணர்த்தும் திருக்கோயில் தில்லையம்பதியே. அங்கே பொற்பதியில் காணப்பெறும் கூத்திறையின் வடிவமும், சிதம்பர ரகசியமும் அண்டப் பெருவெளியாம் ஆகாசம் என்பதையே காட்டுபவையாய் அமைந்துள்ளன. திருக்கருகாவூர் என்னும் திருத்தலத்தில் பதிகம் பாடிய நாவுக்கரசு பெருமானார்,

“இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்கும் தேவனாம் என் உளானாம்
அரவனாம் அல்லல் அறுப்பானாம் ஆகாசமூர்த்தியாய் ஆண்ஏறு ஏறும்
குரவனாம் கூற்றை உதைத்தான் தானாம் கூறாத வஞ்சக் குலயர்க்கு என்றும்
கரவனாம் காட்சிக்கு எளியானுமாம் கண்ணாம் கருகாவூர் எந்தைதானே!’’
என்று பாடி காட்சிக்கு எளியானாய் விளங்கும் எண்திசைக்கும் உரிய ஆகாச மூர்த்தியின் கோல நிலையை நமக்கு உணர்த்திக் காட்டியுள்ளார்.

அட்டமூர்த்தியாக விளங்கும் ஆகாசமூர்த்தியின் வடிவம்தான் ஆடவல்லான் திருமேனி என்பதை நமக்குக் காட்டிய ஓர் அற்புதத் திருமேனி தஞ்சையிலே படைக்கப் பெற்றது. இத்திருமேனி தஞ்சைப் பெருங்கோயிலில் சோழர் காலத்தில் இடம்பெற்ற திருமேனியாக இருந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. தஞ்சைப் பெருங்கோயிலின் ஸ்ரீவிமானத்து உட்கூடு ஆகாசப் பெருவெளி என்பதும், அங்கு ஈசனே 108 தாண்டவங்களை ஆடிக்காட்டும் சிற்பங்கள் இடம்பெற்றிருப்பதும், அத்திருக்கோயிலின் ஆடல்வல்ல பெருமானின் செப்புத் திருமேனி அப்பெருவெளியின் தோற்றம் காட்டும் ஸ்தூல வடிவம் என்பதையும் அக்கோயிலின் வழிபாட்டு நெறி காட்டும் மகுடாகமம் நமக்கு உணர்த்துகின்றது.

பதும பீடத்தின்மேல் கிடக்கும் முயலகன் முதுகின்மீது வலக்காலை இறுத்தி இடக்காலை மேலுயர்த்தி ஒளிச்சுடர்களைத் தாங்கி நிற்கும் திருவாசியின் நடுவண் அண்ணல் பெருஞ்சுழலின் இயக்கமாகச் சுழன்று ஆடிக் கொண்டிருக்கின்றார். தலையில் கொக்கிறகுகள், கபாலம், உன்மத்தம், அந்திப்பிறை ஆகியவை அணி செய்ய தோடுடைய செவியனாகவும் காட்சி தருகின்றார். இருமருங்கும் ஏழு ஏழு சடைகள் விரிந்து பரந்து நிற்க கங்கையும் பாம்பும், மலர் மாலைகளும் அச்சடைகளுக்கு அணி சேர்க்கின்றன.

வலமேற்கரமோ டமருகத்தை ஒலிக்கச் செய்ய இடமேற்கரத்து தீயகலில் சுடர் ஒளிர்கின்றது. முன்னிரு கரங்கள் அபயத்தொடு ஆடலும் காட்டுகின்றன. அதிர வீசி ஆடுகின்ற அவன் கரத்து படமெடுத்த பாம்பும், தோளில் கிடக்கும் ஆடையும் சுழன்றாடும் வேகத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.நீள் வட்டத் திருவாசியின் வெளி விளிம்பில் வரிசையாகத் தீச்சுடர்கள் காணப்பெறுகின்றன. அவை அண்டப் பெருவெளியில் ஒளிர்ந்திடும் கோள்களையும், மீன்களையும் சுட்டுபவையாகும்.

இக்காட்சி ஆடவல்லானின் அனைத்து செப்புத் திருமேனிகளிலும் காணப்பெற்றாலும் இங்கு காணப்பெறும் செப்புத் திருமேனியின் ஒரு தனிச்சிறப்பாகச் சூரியனும் சந்திரனும் திருவாசியின் இரு மருங்கும் காணப்பெறுகின்றனர். தலைக்குப் பின் ஒளிவட்டம் திகழ அவர்கள் ஆகாயத்தில் மிதந்தவாறு தங்கள் கரங்களை மேலுயர்த்தி ஆகாசமூர்த்தியாம் அண்ணலைப் போற்றுகின்றனர்.

வளிமண்டலத்தில் சிறகுகள் விரித்துப் பறக்க முடியும் என்பதையும், வளிமண்டலத்தில் (ஆகாசப் பரவெளியில்) மிதக்கத்தான் முடியும் என்பதையும் துல்லியமாக உணர்ந்த தமிழகத்துச் சிற்பிகள் விண்ணில் திரியும் சூரிய சந்திரர்களை மிதக்கும் கோலத்தில் காட்டியுள்ளனர்.திருவாசி என்பது பிரபஞ்சப் பெருவெளியைக் கலை வடிவில் காட்டும் ஒரு குறியீடாகும். ஆடவல்லானின் திருமேனி வடிவத்தில் பஞ்சபூதத் தத்துவங்களைக் காட்டுவது தமிழகத்துச் சிற்பிகளின் தனித்தன்மையாகும்.

பத்ரபீடமும், கமலமும் அதனுடன் இணைந்து காணும் மகரமும் நிலத்தைச் சுட்டுபவையாகும். பரமனின் தலையில் கரம் கூப்பி நிற்கும் கங்கை வடிவம் நீரினைச் சுட்டுவதாகும். விரிசடையும், பறக்கும் உதர பந்தமும், மேலாடையும் காற்றின் (வளி) தண்மையை உணர்த்துபவையாகும். கரத்தில் ஏந்தியுள்ள தீயலோ நெருப்பைக் காட்டுவதாகும். திருவாசியோ ஆகாசத்தைச் சுட்டுவதாகும்.
இவ்வாறு பஞ்ச பூதங்களின் வடிவ நிலை காட்டப்பெற்றிருப்பதோடு இக்குறிப்பிட்ட திருமேனியில் சூரிய சந்திரர் உருவங்களோடு இயமானனாகவும் ஆகாசமூர்த்தியாகவும் திகழும் அண்ணலின் ஆடற்காட்சியைக் கண்டு மகிழலாம்.

“தஞ்சையில் திகழும் இச்செப்புத் திருமேனி,
இருநிலனாய்த் தீஆகி நீரும் ஆகி
இயமானனாய் எரியும் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயிறு ஆகி
ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி…’’

என்ற திருநாவுக்கரசரின் நின்ற திருத்தாண்டகப் பாடலின் தோற்றமன்றோ!

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post ஆகாசமூர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: