ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி காஞ்சி வரதராஜபெருமாள் தேவி – பூதேவியுடன் வீதியுலா

காஞ்சிபுரம், அக்.19: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தேவி – பூதேவியுடன் உற்சவர் வரதராஜப்பெருமாள் நேற்று முன்தினம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் என புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பல்லி சாபம் நீக்கும் இக்கோயிலில் ஐப்பசி மாதம் பிறப்பு மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை தேவி – பூதேவியுடன் உற்சவர் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், கோயிலின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞசநேயர் கோயிலிலுக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தததும், தேவி – பூதேவியுடன் உற்சவர் வரதராஜப்பெருமாளுக்கு அலங்கார தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், மணியக்காரர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். தேர் பவனி: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பு மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் காமாட்சியம்மன் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் தங்கத்தேரில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோயில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில்  காரியம் சுந்தரேசன், மணியக்காரர் சூரியநாரயணன் ஆகியோர் தலைமையில் கோயில் ஸ்தானிகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். சுக்ர வாரத்தையொட்டி வழக்கம்போல நடைபெறும் தங்கத்தேர் பவனியும் நடைபெறுகிறது.

The post ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி காஞ்சி வரதராஜபெருமாள் தேவி – பூதேவியுடன் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: