- ஐக்கிய மாநிலங்கள்
- நுண்ணறிவு மா
- கலிஸ்டன்
- யோர்க்
- நியூயார்க்
- எங்களுக்கு
- விகாஸ் யாதவ்
- இந்திய அரசு
- பாலஸ்தீனம்
- நியூயார்க் நீதிமன்றம்
நியூயார்க்: நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்த தலைவரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய உளவுத் துறை முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவ் என்பவர் மீது அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இந்திய அரசால் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இரட்டை குடியுரிமை பெற்ற சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை, அமெரிக்காவில் வைத்து படுகொலை செய்ய சதி முயற்சி நடந்ததாக கூறப்படும் வழக்கை அமெரிக்கா நீதிமன்றம் விசாரித்து வருகிறது. குர்பத்வந்த் சிங்கைக் கொலை செய்ய ஒரு கொலையாளியை வேலைக்கு அமர்த்த முயன்றதாக இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர். மேலும் நிகில் குப்தாவை இந்திய அரசு அதிகாரி ஒருவர் பின்னிருந்து இயக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் குர்பத்வந்த் சிங் பன்னு கொலை தொடர்பான சதிக்கும், இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதேநேரம் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்திற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினர். அதையடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. மேலும் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்ய சதி செய்ததாக முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி (ரா) விகாஸ் யாதவ் என்பவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே வெளியிட்ட அறிக்கையில், ‘வன்முறை சம்பவங்களை எஃப்.பி.ஐ ஏற்காது. அமெரிக்காவில் வாழும் மக்களை பழிவாங்க முயற்சிப்பதும் ஏற்கத்தக்கதல்ல. அமெரிக்காவில் வசிப்பவர்களின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவது முக்கியம். குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்வதற்கான சதி கடந்த 2023 மே மாதம் தொடங்கியது. இதில் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி விகாஸ் யாதவ் ஈடுபட்டதாக தெரிகிறது. அவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் செயல்படும் கூலிப்படை முகவர்களுடன் தொடர்புள்ளது. விகாஸ் யாதவ், குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல நிகில் குப்தா என்ற நபரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கொலைக்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் நிகில் குப்தாவுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையை நடத்தின.
இதுகுறித்த அறிக்கை அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் விகாஸ் யாதவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விகாஸ் யாதவ் மீது கொலை சதி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று கூறினார். முன்னதாக செக் குடியரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட நிகில் குப்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு நிகில் குப்தா தன்னை நிரபராதி என்று கூறினார். முன்னாள் உளவுத்துறை அதிகாரி விகாஸ் யாதவ் மீது அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தற்போது அவர் இந்திய அரசுப்பணியில் ஏதும் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்கா பகிர்ந்துள்ள ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணையை ஒன்றிய அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா விவகாரத்திற்கு மத்தியில்…
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியதற்கான ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில், இது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக தான் வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் கனடா எங்களிடம் (இந்தியாவிடம்) அளிக்கவில்லை.
இந்தியா – கனடா இடையேயான உறவுகளின் இந்த ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தை ஏற்படுத்திய சேதத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு’ என்று தெரிவித்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனடா பிரதமரின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல்கள் ஏற்பட்டு கடந்த சில வாரங்களாக அது தீவிரமடைந்தது. இந்த விவகாரத்தை தவறாக கையாண்டதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன. எந்த விதமான ஆதாரத்தையும் அளிக்காமல் கனடா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இந்தியா சமீபத்தில் கூறிவந்தது. கனடா விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்கா தரப்பில் மற்றொரு கொலை சதித்திட்ட குற்றச்சாட்டு கூறப்படுவதால் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இந்திய உளவுத்துறை மாஜி அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.