×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்

பெரும்புதூர், அக்.18: பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தினை வாபஸ் பெற்று, மீண்டும் பணிக்கு திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த, தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9ம்தேதி முதல் 1000க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்களின் தொடர் போரட்டத்திற்கு முடிவு கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, கடந்த 15ம்தேதி சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், ஏ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களுக்கு உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 9 மணி முதல் சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு செல்கின்றனர். தொழிற்சாலையின் நுழைவாயிலில் தொழிலாளர்களின், அடையாள அட்டையை சோதனை செய்த பிறகு, காவலாளிகள் தொழிலாளர்கள் உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Samsung ,Chungwarchatram ,Perumbudur ,Kanchipuram District ,Dinakaran ,
× RELATED சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை...