×

ஜமீன் எண்டத்தூரில் இருந்து அரியனூர் வழியாக அம்மனூர் வரை சாலை விரிவாக்கம் செய்வது எப்போது?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்யூர்: ஜமீன் எண்டத்தூர் கூட்டு சாலையில் இருந்து அரியனூர், நகாமலை வழியாக அம்மனூர் வரையிலான குறுகலான நெடுஞ்சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவாக்கம் செய்வார்களா என கிராமமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். மதுராந்தகம் அருகே முதுகரையில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் இருந்து பிரியும் ஜமீன் எண்டத்தூர் முதல் ஒழவெட்டி, மருவளம், கல்பட்டு, அரியனூர், பெரியவெண்மணி, நாகமலை, அம்மனூர் வழியாக செய்யூர் வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இதில், ஜமீன் எண்டத்தூர் முதல் அம்மனூர் வரையிலான சுமார் 20 கிமீ தொலைவு கொண்ட இந்த நெடுஞ்சாலை இடையே சுமார் 5 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட கனரக கல்குவாரி லாரிகள், மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் வழியாக சென்று வருகின்றன. இதனால், அச்சாலை நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது. மேலும், நெடுஞ்சாலை குறுகலாக உள்ளதாலும், குவாரிகளில் இருந்து செல்லும் கனகர வாகனங்கள் 3 நிமிடத்திற்கு ஒருமுறை செல்கின்றன.

மேலும், இதர வாகனங்கள் என சாலையை தினமும் கடந்து செல்வதால் வாகனங்கள் எதிர் திசையில் வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் திணறி வருகின்றன. மேலும், அரசு பேருந்துகள் எதிரில் வரும்போது ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாத நிலையும் உள்ளது. மேலும், இரவு பகல் என்று பாராமல் குவாரிகள் செயல்பட்டு வருவதால் குவாரிக்கான கனரக வாகனங்கள்அதிகளவிலும், சாலையின் குறுகிய வளைவுகளில் அதிவேகமாக சென்று வருவதால் அவ்வப்போது விபத்துகளும் உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில், ஜமீன் எண்டத்தூரில் இருந்து அரியனூர், பெரியவெண்மணி, நாகமலை, வழியாக அம்மனூர் வரையிலான குறுகிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதியும், மேலும் விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படாத வகையில் குறிப்பிட்ட அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்
பெரியவெண்மணி, நாகமலை மட்டும் அல்லாது தொன்னாடு பகுதியில் இருந்து சில லாரிகள் கிரவல் மண் எம்-சாண்ட், பி-சாண்ட் மண்களை ஏற்றி செல்கின்றன. அதில், குறிப்பாக கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. அந்த லாரிகளில் பள்ளம் மேடு ஆகியற்றில் ஏறி இறங்கும்போது, ஜல்லி கற்கள் சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அம்மனூர் அரியனூர், கல்பட்டு வழியாக ஜமீன் எண்டத்தூர் சாலை, பெரிய வெண்மணி கூட்டு ரோடு அரியனூர் வழியாக வழியாக விழுதமங்கலம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் இரு சக்கர வாகனங்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவியரின் சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சார் ஆகின்றன. இதனால், இந்த சாலைகளில் செல்வோர் தங்களது வாகனங்கள் எப்போது பஞ்சார் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

சாலைகள் பழுது
பெரியவெண்மணி, நாகமலை பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு வரும் கனரக லாரிகள் அதிக அளவிலான பாரங்களை ஏற்றி செல்கின்றன. இதனால், சாலைகள் பழுதாகி வருகிறது. அதனால், மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடரும் விபத்துகள்
குறிப்பிட்ட சாலைகளில் வளைவுகள் அதிமாக இருப்பதால் வளைவுகளில் வாகனங்கள் வருவது தெரியாமல் மோதிக்கொள்கின்றன. மேலும், விபத்து ஏற்படுவவது போல் வந்து அருகருகே நிறுத்தி வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். இதுவரை சிறுசிறு விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகின்றன. ஒருசில நேரங்களில், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சாலையை விரிவக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நடவடிக்கை தேவை
சாலைகளில் எம்-சாண்ட், பி-சாண்ட், சரளை கற்கள், ஜல்லி கற்கள், பார் மண் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த லாரிகளால்தான் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இதுபோன்ற அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post ஜமீன் எண்டத்தூரில் இருந்து அரியனூர் வழியாக அம்மனூர் வரை சாலை விரிவாக்கம் செய்வது எப்போது?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Zamin Endathur ,Ammanur ,Ariyanoor ,Sayyur ,Nagamalai ,Madhurantakam ,Mudugarai ,Koovathur… ,Dinakaran ,
× RELATED ஜமீன் எண்டத்தூரில் இருந்து அரியனூர்...