அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றம் அட்டை பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணி செய்த முதல்வர் அடிசி: புகைப்படங்களை வெளியிட்ட ஆம் ஆத்மி

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் முதல்வர் அடிசி தனது கல்காஜி குடியிருப்பில் இருந்து பணிகளை மேற்கொண்டார். டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக ஆம் ஆத்மியின் அடிசி பொறுப்பேற்றுக்கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்த நிலையில், முதல்வர் அடிசி அங்கு குடியேறினார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வரின் உடைமைகளை நேற்று முன்தினம் எடுத்து வெளியே வைத்தனர். முதல்வரின் இல்லத்தை பூட்டி சீல் வைத்தனர். பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே முதல்வர் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அடிசி தனது கல்காஜி குடியிருப்புக்கு திரும்பினார். அங்கு அவரது உடைமைகள் வைத்த பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து அரசு கோப்புக்களில் கையெழுத்திடுகிறார். இந்த புகைப்படத்தை ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘டெல்லி மக்களுக்காக உழைக்கும் அடிசியின் உறுதிப்பாட்டை பாஜவால் பறிக்க முடியாது. நவராத்திரி விழா நடந்து வரும் நிலையில் ஒரு பெண் முதல்வரின் பொருட்களை குடியிருப்பில் இருந்து பாஜ தூக்கி எறிந்துள்ளது. முதல்வரின் இல்லத்தை பலவந்தமாக கைப்பற்ற பாஜ முயற்சிக்கிறது ஆளுநர் சக்சேனா உத்தரவின்பேரில் தான் முதல்வரின் உடைமைகள் அகற்றப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

The post அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றம் அட்டை பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணி செய்த முதல்வர் அடிசி: புகைப்படங்களை வெளியிட்ட ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Related Stories: