மத்தியபிரதேசத்தில் 52 கிலோ தங்கம், ரூ.11 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ரூ.40 கோடி மதிப்பிலான 52 கிலோ தங்கக்கட்டிகள், ரூ.11 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச தலைநகர் போபால் மற்றும் பல இடங்களில் கடந்த சில தினங்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போபாலில் நேற்று முன்தினம் இரவு குஷல்புரா சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரில் இருந்து தங்கக்கட்டிகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து போபால் காவல்துறை துணை ஆணையர் பிரியங்கா சுக்லா கூறியதாவது, “குஷல்புரா சாலையையொட்டிய வனப்பகுதியில் பல நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள ஒரு காரில் 7 முதல் 8 பைகள் வரை இருப்பதாக ரதிபாத் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பத்துறையினர் உதவியுடன் காரின் கண்ணாடியை உடைத்தோம். அதிலிருந்த பைகளை வௌியே எடுத்தபோது, அதனுள் 52 கிலோ எடையுள்ள 11 தங்கக்கட்டிகள் இருந்தது.

மேலும், ரூ.11 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணமும் இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட தங்கக்கட்கள், ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.52 கோடி. போபாலில் நேற்று முன்தினம் முதல் ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்புடைய சிலரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு பயந்து யாரேனம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரில் இதை வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post மத்தியபிரதேசத்தில் 52 கிலோ தங்கம், ரூ.11 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: