குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி மரணத்திற்கு பைலட் தவறுதான் காரணம்: விசாரணைக்குழு அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர் கடந்த 2021ம் ஆண்டு டிச.8ம் தேதி மனைவி மதுலிகா ராவத் உள்பட 12 பேருடன் தமிழ்நாட்டில் உள்ள குன்னூருக்கு எம்ஐ 17 வி5 ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது மேகங்கள் சூழ்ந்த நிலையில் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் அவர் உள்பட 12 பேரும் பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு 3 ஆண்டுகளுக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை மக்களவை பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. அதில் 2021ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு மனிதப் பிழையே (பைலட் தவறு) காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை இயக்கிய பைலட்டின் பிழையால் விபத்து நடந்து உள்ளது. ஹெலிகாப்டர் சென்ற குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் அங்கு எதிர்பாராத விதமாக சில மேகக் கூட்டங்கள் நுழைந்தன.

இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து கன்ட்ரோல்டு ப்ளைட் இன் டெரெய்ன் என்ற அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது ஹெலிகாப்டர் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே, எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து அல்லது மலையில் மோதி விபத்து ஏற்படுவதே இப்படி அழைக்கப்படுகிறது.

எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் போது தான் பொதுவாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தான் பிபின் ராவத் உள்ளிட்டோரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் வெலிங்டனில் தரையிறங்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், மலைப்பகுதியில் மோதி விபத்தில் சிக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி மரணத்திற்கு பைலட் தவறுதான் காரணம்: விசாரணைக்குழு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: