சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் பலி: பதற்றம் நிலவுவதால் கல்லூரிகள் முன் போலீஸ் குவிப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 4 தேதி இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாநில கல்லூரி மாணவன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொன்பாடி கிராத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சுந்தர் (21). டிப்ளமோ முடித்தவர், மாநில கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்தார். வழக்கமாக கல்லூரிக்கு சென்னை புறநகர் ரயில் வழியாக சென்று வந்துள்ளார். அதன்படி கடந்த 4ம் தேதி கல்லூரி முடிந்து சுந்தர் வீட்டிற்கு செல்ல சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பிஏ வரலாறு 3ம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே உள்ள தங்கனூர் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சந்துரு (20), அவரது நண்பரான பிஏ தமிழ் 2ம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த யுவராஜ் (20), பிஏ வரலாறு 2ம் ஆண்டு படித்து வரும் திருமுல்லைவாயில் கலைஞர் நகர் ரயில்வே குறுக்கு தெருவை சேர்ந்த ஈஸ்வர் (19), ஏபி 2ம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் ஈகாடு கிராமம் அருணாச்சலம் தெருவை சேர்ந்த அரிபிரசாத்(எ) புஜ்ஜி (20), பிஏ 2ம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் செல்வாய்பேட்டை தொழுவர் குப்பம் காலேஜ் 3வது தெருவை சேர்ந்த கமலேஸ்வரன 19) ஆகியோரும் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது மாநில கல்லூரி மாணவன் சுந்தரை பார்த்து ‘எங்கள் முன்னால் உங்கள் கல்லூரி ஐடியை போட்டு கொண்டு சுற்றலாமா’ என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தருப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரும் சேர்ந்து மாநில கல்லூரி மாணவன் சுந்தரை கடுமையாக பொதுமக்கள் முன்னிலையில் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதோடு இல்லாமல் தங்களது ஷூ கால்கால் சுந்தரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் சுயநினைவு இழந்த சுந்தருக்கு இடது காது வழியாக ரத்தம் வெளியேறியது. கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பலத்த உள் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷூ கால்களால் உதைத்ததால் தலையில் பலத்த உள்காயங்கள் ஏற்பட்டு மூளையில் ரத்த கசிவு இருந்துள்ளது. இதனால் டாக்டர்கள் சுந்தருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து மாணவனின் தந்தை ஆனந்த் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி, போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் தாக்குதல் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது பிஎன்ஸ் 191(2), 191(3), 126, 296(பி), 115(2), 109, 351(3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்துரு, யுவராஜ், ஈஸ்வரன், அரிபிரசாத்(எ)புஜ்ஜி, கமலேஸ்வரன் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவன் சுந்தர் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பெரியமேடு போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கல்லூரிக்கு 6 நாள் விடுமுறை அறிவிப்பு
கல்லூரி மாணவன் சுந்தர் உயிரிழந்ததால், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இறந்த மாணவனுக்கு உரிய நிவாரணம் தர கோரியும் மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநில கல்லூரி முன்பு பதற்றமான நிலை ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நிலைமை மோசமானதால் மாநில கல்லூரி முதல்வர் ராமன் கல்லூரிக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை அதாவது, 6 நாட்கள் தொடர் விடுமுறை என அறிவித்தார்.

* ரயில் வழித்தடங்களில் தீவிர பாதுகாப்பு பணி
மாநில கல்லூரி மாணவனை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அடித்து கொலை செய்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து மாநில கல்லூரி மாணவர்கள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, கீழ்ப்பாக்கம் ஈவெரா நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜ் சாலையில் உள்ள மாநில கல்லூரிகள் முன்பு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். அதேபோல், சென்னை பெருநகர போலீசாருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மதுசூதன ரெட்டி தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம்- கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் வழித்தடங்களில் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

The post சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் பலி: பதற்றம் நிலவுவதால் கல்லூரிகள் முன் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: