43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் சிறையில் அடைப்பு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். திருவையாறை சேர்ந்த முத்துக்குமரன்(35) என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கணித பாடம் எடுத்து வருகிறார்.

இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆக.12ம் தேதி குழந்தைகள் ஹெல்ப்லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது. இதையடுத்து குழந்தைகள் ஹெல்ப்லைன் பணியாளர் செண்பகமலர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில், 43 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மாணவிகள் பலரும் ஆசிரியர் முத்துகுமரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தனித்தனியாக துண்டு சீட்டில் எழுதி கொடுத்தனர்.

இதன் அடிப்படையில், குழந்தைகள் ஹெல்ப் லைன் அமைப்பினர், தங்களின் விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்தனர். அதன்பேரில், கணித ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆக.14ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹெல்ப்லைன் பணியாளர் செண்பகமலர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துக்குமரனை நேற்று மாலை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 26ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஆசிரியர் முத்துக்குமரனை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

The post 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: