செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட்டு யூனிட் திருட்டு: 9 பேர் கைது

*உத்திரபிரதேசத்தில் விற்பனை செய்தது அம்பலம்

வலங்கைமான் : வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் டவர்களில் உள்ள விலை உயர்ந்த ரேடியோ ரிமோட்டு யூனிட்டை திருடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செல்போன் டவர்களில் விலை உயர்ந்த பொருளான ரேடியோ ரிமோட்டு யூனிட் திருடப்படுவதாக வடபாதிமங்கலம், திருவாரூர் தாலுகா, நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், ஆலிவலம் மற்றும் கோட்டூர் காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி திருவாரூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் வலங்கைமான், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

இந்நிலையில், குடவாசல் தாலுகா, வேடம்பூரை சேர்ந்த சாமிநாதன் மகன் கணேஷ் மற்றும் அவரது சகோதரர் யோகேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கணேஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனத்தில் தினேஷ் என்பவருடன் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர். தற்போது கோயமுத்துார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மேலும் பணம் தேவைப்படும்போது தினேஷ் உதவியுடன் திருவாருரை சுற்றியுள்ள செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட்டு யூனிட்டை திருடிவிற்பனை செய்துள்ளதாக அதில் கிடைக்கும் பணத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல், நன்னிலம் உட்கோட்ட தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவாரூர் உட்கோட்டம், கீழப்படுகை, மில் தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் வீரமணி, தனது நண்பர்களான திருவாரூர், மேட்டுப்பாளையம் பகுதியைசேர்ந்த கேசவமூர்த்தி (30), திருவாரூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த நரேந்திரன் (34). பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன்ஹரிபிரசாத் (30), புலிவலம் பகுதியை சேர்ந்த ஹாஜா நவாஸ் ஆகியோரும் கடந்த காலங்களில் செல்போன் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

மேலும் செல்போன் டவர்களில் விலை உயர்ந்த பொருளான ரேடியோ ரிமோட்டு யூனிட்டை பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் திருடி தங்களுக்கு தெரிந்த ஹாஜா நவாஸ் என்பவர் மூலம் உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாஜில் மாலிக் என்பவரிடம் விற்பனை செய்து பணம் பெற்றதாக கூறினார். மேலும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வலங்கைமான், பேரளம், குடவாசல், நன்னிலம், திருவாரூர் தாலுகா, வடபாதிமங்கலம், ஆலிவலம், கோட்டூர், நீடாமங்கலம் மற்றும் நாச்சியார்கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள செல்போன் டவர்களில் இதேபோல் திருடி விற்பனை செய்ததாக விசாரணையில் கூறினர்.

அவர்களிடமிருந்து திருடு போன ரேடியோ ரிமோட்டு யூனிட்டை கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருபாதி மங்கலம் காவல் நிலையத்தில் 3 பேர் மீதும் வலங்கை மான் காவல் நிலையத்தில் 6 பேர் மீதும் புகார் செய்யப்பட்டது,மேலும் அவர்களிடம் மேற்கண்ட திருட்டு சம்பவங்களுக்கு வேறுயாரேனும் உடந்தையாக உள்ளனரா? என்றும் திருவாரூர் மாவட்டம் மட்டும் அல்லாது மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

The post செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட்டு யூனிட் திருட்டு: 9 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: