×

உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர்

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியும் தொப்புளில்தான் அமைந்துள்ளது. எனவேதான் உடல் சூடாகிவிட்டால் தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் அந்தக்காலம் முதலே இருந்து வருகிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பதால், உடல் சூடு குறையும், நல்ல தூக்கம் வரும். உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. மேலும், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு போன்றவை குணமாவதுடன் பளபளப்பான தலைமுடி, உதடுகள் வறட்சி சரியாகிறது. அந்தவகையில் எந்தெந்த எண்ணெய் வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்: கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு தேய்த்து விட வேண்டும்.

நல்லெண்ணெய்: உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்லெண்ணையை சிறிதளவு தொப்புளில் விட்டு, இடது புறமாகவும் வலது புறமாகவும் சுற்றி மசாஜ் செய்வது போல லேசாக தேய்த்தால் விரைவாக வயிற்றுவலி குறையும்.

விளக்கெண்ணெய்: இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய்: வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

ஆலிவ் எண்ணெய்: தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

கடுகு எண்ணெய்: மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும். மேலும் உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும். கம்ப்யூட்டர், மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

தொகுப்பு: ரிஷி

The post உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dinakaran ,
× RELATED விஷமாகும் உணவுகள்… உஷார் ப்ளீஸ்!