×

வறட்டு இருமல் குணமாக இயற்கை வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சளித் தொல்லை வாட்டி எடுக்கும். சிலருக்கு சளி அதிகமாகி இறுகிப் போய் வெளியே வர முடியாமல் வறட்டு இருமலாக மாறி தொல்லை தரும். சிலருக்கு அலர்ஜியால் வறட்டு இருமல் உண்டாகும். மேலும், சிலருக்கு எந்தவித காரணமும் இல்லாமல் வறட்டு இருமல் நீண்ட நாளாக தொடரும். இவ்வாறு எந்தவிதமான வறட்டு இருமலாக இருந்தாலும், எளிய முறையில் இயற்கை வழியில் தீர்வு சொல்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.

இது குளிர்காலமாக இருப்பதால், வெளியே உள்ள சீதோஷண நிலையால் சிலருக்கு சளி பிடிக்கலாம். மேலும், வெளியில் செல்லும்போது சுவாசிக்கும் போது மாசு காற்றினால் சிலருக்கு சளி பிடித்து இருமலாக மாறும். மேலும், சிலருக்கு வீட்டு சுவர்களில் இருக்கும் பூஞ்சை தொற்றினாலும் கூட சளிப்பிடிக்கலாம் அல்லது படுக்கையில் உள்ள தூசுகள், தலையணை போன்றவற்றில் இருக்கும் பூஞ்சை தொற்றுகளாலும் கூட அலர்ஜியாகி வறட்டு இருமலை உண்டு பண்ணும். இந்த வறட்டு இருமல் ரொம்பவே தொல்லையாக இருக்கும். இவர்களுக்கு இரும்மி இரும்மி சளி வெளியே வராமல், நெஞ்சு வலியாக இருக்கும். இதற்கு எளிய முறையில் தீர்வு காணலாம். அவை என்ன என்று பார்ப்போம்:

தேன்

பொதுவாக சளி அதிகமாகவோ, இருமலோ இருந்தால் வெறுமனே தேனை தினமும் எடுத்துக் கொண்டாலே, சளியும் இருமலும் கட்டுப்படும்.

தேன் எலுமிச்சை

தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டையும் கலந்து தினமும் 3 -4 முறை சாப்பிட வேண்டும். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த தேன் எலுமிச்சை சாப்பிட்டதும் உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. அது தொண்டையில் கொஞ்ச நேரம் தங்கியிருந்தால் நன்கு வேலை செய்யும்.

சுக்கு, மிளகு, திப்பிலி

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து 2 கிராம் அளவு எடுத்து 1 தேக்கரண்டி தேனில் கலந்து, தினமும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை சாப்பிட்டு வர, வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதுவும் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

அதிமதுரம்

ஒரு தேக்கரண்டி அதிமதுரம் பொடியுடன் மிளகுத் தூளோ அல்லது சுக்குத் தூளோ அரைத் தேக்கரண்டி சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர, நாள்பட்ட வறட்டு இருமல் கூட விரைவில் குணமாகும்.

பைனாப்பிள்

பைனாப்பிள் துண்டுகள் மீது சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, வறட்டு இருமல் நன்கு கட்டுப்படும்.

பாதாம்

நாள்பட்ட வறட்டு இருமலுக்கு பாதாம் நல்ல தீர்வாக இருக்கும். தினமும் காலை வேளையில் ஊற வைத்த 4-5 பாதாம் பருப்பை சாப்பிட்டுவிட்டு, வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வர, வறட்டு இருமல் விரைவில் குணமாகும்.

சூப்

காய்கறிகள், மிளகு, பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து சூப்பாக செய்து காலையில் சாப்பிட்டு வர, இது சளியை இளக்கி வெளியே கொண்டு வந்துவிடும். இதனால், இருமல் குறைந்துவிடும்.

கடுக்காய்

பெரியவர்களாக இருந்தால், கடுக்காய், சித்தரத்தை சம அளவு எடுத்து சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதிலிருந்து 2 கிராம் தினமும் எடுத்து, வாயிலிட்டு ஓரமாக ஒதுக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக அதன் உமிழ்நீரை விழுங்கிக் கொண்டு வரும்போது, சளி குறைந்து வறட்டு இருமல் கட்டுப்படும். இதை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு வாயில் அடக்கத் தெரியாது.

குழந்தைகளுக்கு என்றால், இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும். கால் தேக்கரண்டி ஓமம், இஞ்சி ஒரு துண்டு, 5-6 மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் சின்ன உரலிலோ, அம்மியிலோ இட்டு லேசாக பொடித்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து சிறிது தேன் சேர்த்து இரண்டு பாதியாக பிரித்து, ஒரு பாதியை காலையிலும் பின்னர், 3 மணி நேரம் கழித்து மீதமுள்ளதையும் குடிக்க கொடுத்தால் வறட்டு இருமல் நன்கு குணமாகும். சளி கட்டிப் போயிருந்தாலும், இளக்கி நன்கு வெளியே தள்ளிவிடும். இவை எல்லாம் ரொம்பவே சுலபமான எளிய வழிமுறைகள்தான். இவற்றை பின்பற்றினாலே வறட்டு இருமல் நன்கு கட்டுப்படும்.

தொகுப்பு: தவநிதி

The post வறட்டு இருமல் குணமாக இயற்கை வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED வலியை வெல்வோம்