ஊட்டி – கோத்தகிரி சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்

 

ஊட்டி, அக். 4: ஊட்டி – கோத்தகிரி சாலையில் சிலர் வாகனங்களை நிறுத்துவதால் பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. ஊட்டியில் இருந்து கோத்திகிரி வழியாக மேட்டுபாளையம் போன்ற சமவெளி பகுதிகளுக்கு செல்ல மாற்றுப்பாதை உள்ளது. மழை காலங்களில் குன்னூர், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை சேதமடையும் சமயங்களில் நீலகிரி மாவட்டத்தை சமவெளி பகுதி மாவட்டங்களுடன் இணைக்கும் சாலையாக இந்த கோத்தகிரி சாலை விளங்குகிறது.

இந்நிலையில் சமீப காலமாக கோடப்பமந்து பகுதியில் இருந்து தொட்டபெட்டா ஜங்சன் பகுதி வரை உள்ள பகுதிகளில் சிலர் சாலை ஒரங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் தும்மனட்டி, இடுஹட்டி, கோத்தகிரி, கட்டபெட்டு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் மற்றும் கார், பைக் போன்ற வாகனங்களை சீராக இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.

மேலும் தேயிலை பூங்கா மற்றும் தொட்டபெட்டா செல்ல கூடிய ஏராளமான சுற்றுலா பயணிகளும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஊட்டி – கோத்தகிரி சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: