துரைப்பாக்கம்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜாகீர் உசேன் (22), ஜாபர் உசேன் (25). நண்பர்களான 2 பேரும், சோழிங்கநல்லூரில் வாடகை வீட்டில் தங்கி, கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இவர்கள், நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ஏணி, பைப் உள்ளிட்ட பொருட்களுடன் பைக்கில் சோழிங்கநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ராஜிவ்காந்தி சாலை வழியாக மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சிக்னல் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து ஜாகீர் உசேன் மீது எறி இறங்கியதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜாபர் உசேன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாநகர பேருந்து ஓட்டுநர் தமிழ்மணி, நடத்துனர் பிரபாகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜாகீர் உசேன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நண்பர்கள், சாலையில் சிதறி கிடந்த மூளையை கண்டு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
மற்றொரு சம்பவம்: அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த பூபாலன் (22), நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பைக்கில் சென்றபோது, அந்த வழியாக வந்த லோடு வேன், இவரது பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பூபாலன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பூபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய அசாம் மாநிலத்தை சேர்ந்த லோடு வேன் டிரைவர் ஐநூல் (29) என்பவரை கைது செய்தனர்.
The post மாநகர பேருந்து மோதி விபத்து வாலிபர் மூளை சிதறி பலி: துரைப்பாக்கம் அருகே சோகம் appeared first on Dinakaran.