துரைப்பாக்கம்: தொழிலதிபர் தம்பதி டெபாசிட் செய்த பணத்தில் ரூ.3.70 கோடியை கையாடல் செய்த வழக்கில், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், லண்டனுக்கு தப்பி சென்ற முக்கிய குற்றவாளியான மேலாளருக்கு போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளனர். சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழிலதிபரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், அடையாறில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் வங்கி கணக்கு பராமரித்து வந்தேன்.
அந்த வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வந்த பாட்ரிக் ஹாப்மேன் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு பழக்கமானார். நான், சீனியர் சிட்டிசன் என்பதால் எனது சேமிப்பு கணக்கில் ரூ.7.5 கோடியையும், எனது மனைவி பானுமதி பெயரில் புதிதாக 2 சேமிப்பு கணக்குகள் தொடங்கி, அதில் ரூ.7.5 கோடியையும் டெபாசிட் செய்தேன். பிறகு சொந்த வேலையாக நாங்கள் வெளிநாடு சென்றுவிட்டோம். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கொண்ட வங்கி மேலாளர் பாட்ரிக் ஹாப்மேன், எங்களுக்கு தெரியாமல் காசோலைகளில் எங்கள் கையெழுத்தை போலியாக போட்டு, அதன் மூலம் எங்கள் கணக்கில் இருந்து ரூ.3.70 கோடியை அபேஸ் செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, தனியார் வங்கி மேலாளர் பாட்ரிக் ஹாப்மேன் மற்றும் ராபாட் என்பவர் உதவியுடன் தொழிலதிபர் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பானுமதி வங்கி கணக்கில் இருந்த ரூ.7.5 கோடியில் ரூ.3 கோடியே 70 லட்சத்து 33 ஆயிரத்தை வெவ்வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளருக்கு உடந்தையாக இருந்த ராபட்டை கடந்த மே 17ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில், கமிஷன் அடிப்படையில் மேலாளருக்கு கீழ் பணியாற்றி வந்த தனியார் வங்கி ஊழியர்களான திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (32), சென்னை முகப்பேர் பகுதியை சேர்நத் செந்தில்குமார் (41) ஆகியோர் பெயரில், 5 வங்கி கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் பணம் கையாடல் செய்து கமிஷன் பெற்றதும் உறுதியானது. அதைதொடர்ந்து, தனியார் வங்கி ஊழியர்கள் கார்த்திக், செந்தில்குமார் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தனியார் வங்கி மேலாளர் பாட்ரிக் ஹாப்மேன் என்பவர் லண்டனுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. அவரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
The post தொழிலதிபர் தம்பதி டெபாசிட் செய்த ரூ.3.70 கோடி கையாடல் வங்கி ஊழியர்கள் கைது: லண்டனுக்கு தப்பிய மேலாளருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் appeared first on Dinakaran.