×

தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

உளுந்தூர்பேட்டை: தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் நற்சோனை வரவேற்றார். இந்த மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், அய்யா வைகுண்டர் இயக்க தலைவர் பால.பிரஜாபதி அடிகளார், விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் எம்எல்ஏ, ரவிக்குமார் எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் ஆனி ராஜா, காங்கிரஸ் எம்பி சுதா, மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொகையா ஷேக் முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில செயலாளர் பாத்திமா முசாபர், மனிதநேய மக்கள் கட்சி மகளிரணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் வருமாறு: அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 47ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை ஒன்றிய அரசு தேசிய கொள்கையாக வரையறுக்கவும், சட்டம் இயற்றவும் வேண்டும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதோடு, கூடுதல் நிதிப்பகிர்வும் அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மதுபான கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். குடி நோயாளிகளுக்கும், போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்குவதோடு, மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். தமிழக சட்டசபையில் சிறப்பு மற்றும் கூடுதல் நிதிக்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் என 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Vizic Women's Conference ,Union State ,ULUNTHURBATI ,VISICA WOMEN ,UNION GOVERNMENT ,Liberation Leopards Party Women's Team ,Ulundurpet ,Vic Women's Conference ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு