×

ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை துவக்கம்

 

ஈரோடு, அக்.2: ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட் வணிக வளாகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வாராந்திர ஜவுளி வாரச்சந்தை நேற்று நடைபெற்றது. மேலும், டி.வி.எஸ். வீதி, மணிக்கூண்டு ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதிகள் மற்றும் பனியன் மார்க்கெட் பகுதிகளிலும் வாராந்திர ஜவுளி விற்பனை நடைபெற்றது. இது குறித்து கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில்,

“தீபாவளிக்கு இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தீபாவளிக்கான புதிய ஆடைகள் கடந்த ஒரு வாரமாக வரத் தொடங்கியுள்ளன. மும்பை, சூரத், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நவீன ஆடை ரகங்கள் வரத் தொடங்கியுள்ளன.  அதே நேரம், தீபாவளிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான உட்பட பல மாநில மொத்த வியாபாரிகள், விரைவில் வந்து மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்காக ஆடைகளை வாங்கி செல்வார்கள்.

இருப்பினும் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், சில கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றோர் சில்லறையாக குறைந்த அளவு ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர். நேற்று 30 சதவீத ஆடைகள் விற்பனையாகியுள்ளன. மொத்த விற்பனை முற்றிலும் குறைந்தே காணப்பட்டது. மாத துவக்கம் என்பதால் வரும் நாட்களில் மொத்த விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார். தவிர, நேற்று சாலை ஓர கடைகள், வாகனங்களில் வைத்து ஜவுளி விற்பனை, குடோன் விற்பனை அதிகமாகவே காணப்பட்டது. ஜவுளி வாங்க வியாபாரிகளை விட பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Erode textile market ,Erode ,Gani Market ,Panneerselvam Park ,T.V.S. Road ,Manikundu Road ,Iswaran Temple Roads ,Diwali ,Dinakaran ,
× RELATED மது விற்ற 3 பேர் கைது