ஈரோடு, டிச. 19: இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகளை எதிர் வரும் 2025 மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடந்த 6-12-2024 முதல் 17-12-2024 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளி, இடையன்காட்டுவலசு நகரவை உயர்நிலைப்பள்ளி, ஈரோடு, அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி, கோபி நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் இச்சேவை மையங்களை நேரில் அணுகி, தேர்வு கட்டண தொகை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, தேர்வர்களின் நலன் கருதி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (20ம் தேதி) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
The post தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.